இன்றைய சூழலில் வங்கி கணக்கு இல்லாதவர் அரிது. பெரும்பாலானோர் தங்களது பணத்தை வங்கிகளில் சேமித்து பராமரித்து வருகின்றனர். எனினும், சிலர் எதிர்பாராமல் மரணமடைந்தாலோ, பாஸ் புக் அல்லது ஆவணங்கள் தொலைந்தாலோ, பல கணக்குகள் நீண்ட காலம் கோரப்படாமல் வங்கிகளில் முடங்கிக்கிடக்கின்றன.
வங்கிகளில் 10 ஆண்டுகள் பரிமாற்றம் இல்லாத சேமிப்பு அல்லது நடப்பு கணக்குகள் செயல்படாத (Inactive) கணக்குகளாக மாறுகின்றன. பின்னர் அந்த கணக்கிலுள்ள பணம் ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டுதாரர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படுகின்றது. ஆனால், பல நேரங்களில் கணக்கைத் தொடங்கியபோது குறிப்பிடப்பட்ட வாரிசுதாரரை (Nominee) கண்டுபிடிப்பது கடினமாகி விடுகிறது. இதனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு சேராமல் போகும் நிலை ஏற்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் மட்டும் கோரப்படாத தொகையாக ரூ.58,330 கோடி 26 லட்சம், தனியார் வங்கிகளில் ரூ.8,673 கோடி 72 லட்சம் வரை இருப்பதாக கடந்த ஜூன் மாத கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்த பிரச்சினையை தீர்க்க, நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இப்போது வங்கி கணக்கு அல்லது லாக்கர் வசதி தொடங்கும் நபர்கள், அதிகபட்சம் நால்வரை வாரிசுதாரர்களாக நியமிக்கலாம். அத்துடன், ஒவ்வொருவருக்கும் வழங்கப்படவேண்டிய தொகை அல்லது பங்கு வெளிப்படையாக குறிப்பிடலாம் எனவும் புதிய விதி கூறுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர் மரணமடைந்தால் பணம் அல்லது நகை போன்ற சொத்துகள் வங்கிகளில் முடங்கிக் கிடக்காமல், உரிய வாரிசுகளிடம் எளிதாக சென்றடையும் என நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளன.
இந்த விதி அமலுக்கு வர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல் 10, 11, 12, 13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.



