பொதுவாக ஃப்ரிட்ஜில் வைத்தாலே உணவு பாதுகாப்பாகவும், கெட்டுப்போகாது என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஃப்ரிட்ஜின் வெப்பநிலை உணவு கெட்டுப் போவதை தாமதிக்க செய்யும். அதேசமயம், அதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது.
உணவின் தன்மை, பராமரிப்பு முறை, குளிர்ச்சியின் நிலைத்தன்மை என பல காரணிகள் உள்ளன. குறிப்பாக, இறைச்சி போன்ற அசைவ உணவுகள், பாக்டீரியாக்களுக்கு மிக விருப்பமான சூழல். சிறிய வெப்பநிலை வித்தியாசமும் இறைச்சியில் கிருமி வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும்.
மருத்துவர் ஃபரூக் அப்துல்லா வழங்கிய தகவலின் அடிப்படையில், இறைச்சியை பாதுகாக்க வேண்டுமானால் அதை -18°C அல்லது அதற்கும் குறைவான உறை குளிர்நிலையில் (freezer) வைக்க வேண்டும். அந்த நிலையில், பாக்டீரியா பெருக்கமடைய முடியாது. அதே நேரத்தில், இரண்டாவது நாளில் சாப்பிட எண்ணினால், +2°C முதல் +4°C வரை பராமரிக்க வேண்டும். அதற்கும் மேலாக உணவை வைத்தால், கிருமி வளர்ச்சி பெரிதும் எளிதாகும்.
இறைச்சி குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் பிற உணவுகளுக்கு கிருமி பரவாமல் இருக்க, காற்றுப்புகாத, சுத்தமான கண்டெய்னர்களில் வைத்தே பாதுகாப்பது அவசியம். சமைத்த உணவுகள் அறை வெப்பநிலையில் (25°C–30°C) சில மணிநேரங்களில் கெட ஆரம்பிக்கும். எனவே, ஒரு முறை சமைத்த உணவை நான்கு மணிநேரத்துக்குள் சாப்பிடுவதுதான் பாதுகாப்பான வழி.
இறைச்சி பாதுகாப்பாக வெந்து இருக்க வேண்டுமானால், 71°C (160°F) வெப்பநிலையில் நன்கு சமைக்கப்பட வேண்டும். மறுநாள் உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது அந்த அளவுக்கு வெப்பம் அடையும் வரை சூடு செய்ய வேண்டும். வெப்பநிலை குறைவாக இருந்தால், கிருமிகள் உயிரோடு இருந்து, தொற்றை பரப்பும் ஆபத்து உண்டு.
ஃப்ரீசரில் வைத்த இறைச்சியை நேரடியாக அறை வெப்பநிலையில் வைத்தால், பாக்டீரியா வளர்ச்சி ஏற்படும். அதற்கு பதிலாக, ஃப்ரிட்ஜில் வைத்தபடியே மெதுவாக உரைக்கும் முறையை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.