நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட ஆர்.ஓ. (RO) குடிநீர் குறித்த முக்கியமான ஆரோக்கிய எச்சரிக்கையை சென்னை உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். நாம் சுத்தமானதாக கருதும் ஆர்.ஓ. நீரால் உடலுக்கு நன்மை இல்லை என்றும், பல அத்தியாவசியச் சத்துகள் இழக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்.ஓ. சுத்திகரிப்பு முறையில், நீரில் இயற்கையாக உள்ள தாதுக்கள் (Minerals) மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. இதனால், ஆர்.ஓ. நீரை மட்டுமே குடித்துவரும்போது, உடலுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. எனவே, சுத்திகரிக்கப்பட்ட நீரை அல்லது மினரல் வாட்டரை குடிக்கும்போது கூட, அதை மண்பானையில் சேமித்துக் குடிப்பது நல்லது. மண்பானை நீரின் மூலம் உடலுக்குத் தேவையான கனிம சத்துகள் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உருவாகும்.
குளிர்ந்த நீரைத் தவிர்ப்பது அவசியம் :
உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க, குடிக்கும் நீரின் வெப்பநிலை மிகவும் முக்கியம். ஃபிரிட்ஜில் வைத்து அதிகப்படியாக குளிரூட்டப்பட்ட நீர், நம் உடலின் வெப்பநிலையுடன் ஒத்துப் போகாது. இது உடல் இயக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக, வெயிலில் இருந்து திரும்பியவுடனும், சாப்பிட்ட பிறகும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் மோசமானது என்று நிபுணர் எச்சரிக்கிறார்.
பழக்க வேண்டிய ஆரோக்கியப் பழக்கங்கள் :
மாறாக, உணவுக்குப் பிறகு வெந்நீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும். இதேபோல, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதும் ஒரு சிறந்த பழக்கமாகும். மேலும், அன்றாடம் அருந்தும் தண்ணீரில் பழங்கள் அல்லது காய்கறிகளை ஊற வைத்து, ‘இன்ஃபியூஸ் வாட்டர்’ (Infused Water) ஆக அருந்துவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
பழச்சாறுகளை விடப் பழங்களே சிறப்பு :
நீரச்சத்தைப் பெறுவதற்காகப் பழச்சாறுகளை அருந்துபவர்கள் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது. அதைவிடச் சிறந்தது, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அப்படியே முழுமையாகச் சாப்பிடுவதுதான். நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தினமும் உட்கொள்வது, உடலின் நீர் மற்றும் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.



