அசைவ உணவை தினசரி சாப்பிடுவது, பல்வேறு தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய மிகப்பெரிய ஆய்வில், 4.75 லட்சம் பேர் தொடர்ந்து 8 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். இதில், தினசரி அதிக அளவில் அசைவம் சாப்பிடுபவர்கள் இதய நோய், கல்லீரல் பிரச்சனை, டைப்-2 நீரிழிவு, நிமோனியா, செரிமான பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆய்வு அறிக்கையில், தினசரி அசைவ உணவு சாப்பிடுவதால், 6 வகையான முக்கிய உடல்நலப் பிரச்சனைகளை மோசமாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவப்பு இறைச்சி மற்றும் செயற்கையாகச் சமைத்த இறைச்சியை அதிகமாக சாப்பிடுவோருக்கு இந்த அபாயம் அதிகம் என தெரியவந்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், அசைவ உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அளவோடு சாப்பிட வேண்டும் என்றும் காய்கறி, பழங்கள், பருப்பு போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.
இதே நேரத்தில், கோழி இறைச்சி அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் இருந்தாலும், இரும்புச் சத்து குறைவால் ஏற்படும் அனீமியா அபாயம் குறைவாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, சில ஊட்டச்சத்து நன்மைகளும் வழங்குகிறது.
மேலும், ஒரு நபரின் உடல் எடை இந்த அபாயங்களில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அதிக எடை அல்லது தொப்பை இருப்பவர்கள் அதிக அசைவ உணவு சாப்பிடும் போது உடல்நல பாதிப்புகள் மேலும் அதிகரிப்பதற்காக ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது.
இதயநோய் பாதிப்பு :
இதய நோய், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், இந்த வகையான மாமிசங்களை அடிக்கடி உட்கொள்வது என்பது அவர்களின் உடல்நலத்திற்கு மேலும் ஆபத்துகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வகையான மாமிசங்களில் அதிக கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளன. இவை நாளடைவில் இரத்தக் குழாய்களில் சேர்ந்து, அவை குறுகிவிடும் அபாயத்தை உண்டாக்குகின்றன. இதனால் உயர் இரத்த அழுத்தம், இரத்தக் குழாய்கள் கடினமாகும் நிலை, இதயத்தில் அடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
கல்லீரல் பாதிப்பு :
இறைச்சி உணவுகளை தினமும் உட்கொள்வது, கல்லீரலுக்கும் ஆபத்தானது. இவர்கள், கொழுப்பு கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உடல் எடை பிரச்சனை :
உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோர், குறிப்பாக உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள், இறைச்சி உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். இந்த வகை இறைச்சி உணவுகள் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு கொண்டவை. இதனால் இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகை புற்றுநோய்கள் போன்ற பல ஆபத்தான நோய்களுக்கு காரணமாக அமைகிறது.