தென்னிந்தியர்களின் பிரதான உணவாக வெள்ளை அரிசி சாதம் இருந்தாலும், அரிசியை 3 வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளை அரிசியை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் ஏற்படக்கூடிய முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.
உடல் பருமன் மற்றும் பசி உணர்வு அதிகரிப்பு :
வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து மிக அதிகமாக உள்ளது. இதை தினசரி 3 வேளையும் அதிக அளவில் சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச் சத்து சேருவது அதிகரித்து, விரைவிலேயே உடல் பருமன் ஏற்படும். மேலும், அரிசி சாதம் எளிதில் ஜீரணமாகிவிடுவதால், சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் பசி உணர்வு ஏற்படும்.
இதனால், அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது கடினமாகும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி சாதத்தை உணவில் இருந்து குறைத்துக்கொண்டு, அதற்கு மாற்றாக சப்பாத்தி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகம் :
சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசி சாதத்தை அளவோடு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்குக் காரணம், அரிசியில் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், சாதம் சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக வேகமாக உயர ஆரம்பிக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல :
வெள்ளை அரிசியில் நார்ச்சத்து (Fibre) மிகக் குறைவாக இருப்பதால், அதைத் தினமும் அதிகமாகச் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தினசரி உணவில் வெள்ளை அரிசி சாதம் சேரும்போது, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவு வேகமாக அதிகரிக்கக்கூடும். இதுவே இதயத் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடல் பருமன் :
தினமும் வெள்ளை அரிசி சாதத்தை அதிகமாகச் சாப்பிடுவது, வளர்சிதை மாற்ற நோய்க்குறி (Metabolic Syndrome) அபாயத்தை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெள்ளை அரிசி உடலில் வளர்சிதை மாற்ற வேகத்தைக் குறைத்து, உடல் பருமன் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே, இந்த ஆரோக்கியச் சிக்கல்களை தவிர்க்க, வெள்ளை அரிசிக்குப் பதிலாக நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் நிறைந்த பழுப்பு அரிசி (Brown Rice) அல்லது பிற ஆரோக்கியமான தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : கோவை மாணவி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!! அரைகுறை ஆடையுடன் காதலனுக்காக செய்த செயல்..!!



