சிலருக்குச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுக்கும் உணர்வு ஏற்படும். இதைச் சாதாரணப் பசி என்று புறக்கணிக்கக் கூடாது. அதீதப் பசிக்குப் பின்னால் சில தீவிரமான உடல்நலப் பிரச்சனைகள் மறைந்திருக்கலாம். மருத்துவத் துறையில், இந்த நிலை ‘பாலிஃபேஜியா’ (polyphagia) என்று அழைக்கப்படுகிறது.
நீரிழிவு நோய்: அதீதப் பசிக்கு நீரிழிவு நோயே முக்கியக் காரணமாகும். நமது உடல் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இரத்தத்தில் உள்ள இந்த குளுக்கோஸ் செல்களைச் சென்றடைய இன்சுலின் தேவைப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சரியாகச் செயல்படுவதில்லை. இதனால், செல்களுக்கு ஆற்றல் கிடைக்காமல், உடல் தொடர்ந்து உணவுக்கான சமிக்ஞைகளை அனுப்புகிறது. இதன் விளைவாக, எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் பசி எடுக்கும் உணர்வு ஏற்படுகிறது.
தைராய்டு பிரச்சனைகள்: தைராய்டு சுரப்பி அதிகச் சுறுசுறுப்புடன் செயல்படும்போது, உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதனால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. எவ்வளவு உணவு சாப்பிட்டாலும், உடல் அதை உடனடியாகப் பயன்படுத்திவிடுவதால், மீண்டும் பசி எடுக்கத் தொடங்குகிறது. பசியுடன் சேர்ந்து உடல் எடை குறைதல் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தைராய்டு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
மன அழுத்தம் – தூக்கமின்மை: கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடல் ‘கார்டிசோல்’ என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது பசியை அதிகரிக்கிறது. மேலும், இரவில் சரியாகத் தூங்காதவர்களுக்கு, பசியைத் தூண்டும் ‘க்ரெலின்’ என்ற ஹார்மோன் அதிகரித்து, பசியைக் குறைக்கும் ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் குறைகிறது. இதுவும் தேவையற்ற பசிக்குக் காரணமாகிறது.
நீரிழப்பு: பெரும்பாலும் மூளை தாகத்தைப் பசி என்று தவறாகப் புரிந்துகொள்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது, பசி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். அதனால்தான், பசி எடுக்கும்போது முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை: நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது வயிறு நிறைந்த உணர்வைத் தக்கவைக்க உதவும். சர்க்கரை அளவு மற்றும் தைராய்டு செயல்பாட்டைக் கண்காணிக்க இரத்தப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புகளைக் குறைக்க வேண்டும். இந்தப் பிரச்சனை பல நாட்களுக்கு நீடித்தால், அதன் சரியான காரணத்தைக் கண்டறிய உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.
Read More : டிச., 25 இல்ல; இந்த ஊரில் ஜன., 6 தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது..! காரணம் தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க..!



