உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கான வழியைத் தேடும் போது, கடினமான உடற்பயிற்சிகள், ஜிம்கள், கடுமையான டயட் கட்டுப்பாடுகள் என பலர் தயங்கி நிற்கிறார்கள். இத்தகைய சூழலில், சுகாதார நிபுணர்கள் கூறும் ஒரு எளிய உண்மை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. தினமும் ஒரு கிலோமீட்டர் நடப்பதே போதுமான மாற்றத்தை தொடங்க முடியும்.
நடைப்பயிற்சி என்பது எளிமையானது மட்டும் அல்ல; எல்லா வயதினருக்கும் ஏற்றதும், ஆயினும், “ஒரே கிலோமீட்டர் நடப்பதால் எல்லோருக்கும் ஒரே அளவு எடை குறையும்” என்ற எண்ணம் தவறானது. எடை குறைவு என்பது நடப்பதைக் காட்டிலும், உடல் எடை, நடை வேகம், நடக்கும் நிலப்பரப்பு, வயது, வளர்சிதை மாற்றம் போன்ற பல காரணிகளின் கூட்டு விளைவாகும்.
அதிக எடையுள்ளவர்கள் நடக்கும்போது அதிக சக்தியை பயன்படுத்துவதால், அவர்கள் அதிக கலோரிகளை எரிக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு நடைப்பயிற்சி சிரமமாகவும் இருக்கும். இதே தூரத்தை குறைந்த எடையுள்ள ஒருவர் நடந்தால், கலோரி எரிப்பு குறைவாக இருக்கும். அதுபோலவே, மெதுவாக நடப்பதை விட சுறுசுறுப்பாக நடப்பதால் உடல் அதிகமாக செயல்படுகிறது. சமமான சாலையை விட, மலைப்பாதை அல்லது படிக்கட்டுகளில் நடப்பது அதிக உழைப்பை கேட்கிறது; அதனால் எடை குறைவும் அதிகரிக்கிறது.
வயதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இளம் வயதினரின் வளர்சிதை மாற்றம் வேகமாக இருப்பதால், அவர்கள் நடக்கும்போது அதிக கலோரிகளை எரிக்க முடிகிறது. வயது கூடும்போது அந்த வாய்ப்பு குறைகிறது. இருந்தாலும், நடைப்பயிற்சியை தவிர்க்க வேண்டும் என்பதில்லை; மாறாக, வயது கூடும் போது நடைப்பயிற்சியின் அவசியம் மேலும் அதிகமாகிறது.
உதாரணமாக 55 கிலோ எடையுள்ள ஒருவர் மணிக்கு 5 கிமீ வேகத்தில் 1 கிமீ நடப்பதன் மூலம் தோராயமாக 50 முதல் 60 கலோரிகளை எரிக்க முடியும். அதேபோல், 70 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு கிலோமீட்டர் நடந்தால் தோராயமாக 60 முதல் 75 கலோரிகளை எரிப்பார். இருப்பினும், 90 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு கிலோமீட்டர் வேகமாக நடப்பதன் மூலம் 80 முதல் 100 கலோரிகளை எரிக்க முடியும்.
அதிக கலோரிகளை எரிக்க விரும்பினால், வேகமாக நடக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் நடக்கும்போது, உங்கள் இதயம் வேகமாக துடிக்கிறது. இது அதிக கலோரிகளை எரிக்கும். நீங்கள் நடைப்பயணத்திற்குச் சென்றாலும், இடையில் ஓட முயற்சிக்கவும். இது ஒரு நல்ல உடற்பயிற்சி. இது உங்கள் உடல் அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
மேலும், ஒரே மாதிரியான நிலப்பரப்பில் நடக்காமல், அவ்வப்போது மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் கொண்ட மலைப்பாதைகளில் நடந்தால், நீங்கள் அதிக எடையைக் குறைக்க முடியும். இருப்பினும், ஒவ்வொரு நாளும் ஒரே தூரம் நடப்பதற்குப் பதிலாக, சிறிது நேரம் நடக்க முயற்சிக்கவும். இது அதிக எடையைக் குறைக்க உதவும்.



