ஆண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், தபால் துறை 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய சிறப்பு திட்டம் தான் பொன்மகன் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் இருப்பதைப் போலவே, இது ஆண் குழந்தைகளுக்கான தனிப்பட்ட திட்டமாகும்.
முக்கிய அம்சங்கள்:
இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். குறைந்தபட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 9.7 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. எனினும், வட்டி விகிதம் வருடா வருடம் மாறுபடும்.
இத்திட்டத்தில் மாதம் ரூபாய் 500 செலுத்தும் ஒரு நபர் மொத்த முதிர்வு காலத்தின் இறுதியில் ரூபாய் 1.83 லட்சம் தொகையினை பெற முடியும்.. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள் என்றாலும், அடுத்த 5 வருடங்களை தொகுப்புகளாக அதிகரித்து கொள்ளலாம். அதாவது, முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 வருடங்கள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இந்த திட்டத்தின் கூடுதல் அம்சமாகும். ஆண் குழந்தை வளர்ந்து மேஜர் ஆனதுமே, சம்பாதித்த வட்டி உட்பட முழுத்தொகையும் குழந்தைக்கு வழங்கப்படும்.
யார் கணக்கு தொடங்கலாம்? 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் நேரடியாக தனிப்பட்ட கணக்கைத் தொடங்கலாம். 10 வயதிற்கு குறைவான குழந்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் இணைப்பு கணக்கு தொடங்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்:
- பிறப்பு சான்றிதழ்
- குழந்தையின் புகைப்படம்
- பெற்றோர்/பாதுகாவலரின் ஆதார், பான், முகவரி சான்றிதழ்கள்
- விண்ணப்பப் படிவம் (தபால் நிலையத்தில் கிடைக்கும்)
- ஆரம்ப வைப்புத் தொகை: ரூ.500
கணக்கு திறந்தவுடன் குழந்தைக்குப் பாஸ்புக் வழங்கப்படும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எந்த அஞ்சலகத்திற்கும் இந்தக் கணக்கை மாற்றிக் கொள்ளலாம்.