சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வந்தவுடன் பலரும் முதலில் முயற்சிப்பது வீட்டு வைத்தியங்களைத்தான். ஆனால் மிளகு ரசம், கோழி சூப் போன்ற பாரம்பரிய உணவுகள் உண்மையிலேயே நோயைக் குணப்படுத்துமா அல்லது அது ஒரு நம்பிக்கை மட்டுமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சளி சுமார் 200-க்கும் மேற்பட்ட வைரஸ்களால் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் வைரஸ்கள் உருமாற்றம் அடைவதால், சளி மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளது.
சரியான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை, நோயெதிர்ப்பு சக்தியைப் பாதிக்கின்றன. ஆனால், நாம் பயன்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டவையா? என்ற கேள்விக்கு பலருக்கும் எழுகிறது.
வைட்டமின் சி : கடந்த 2023-ல் வெளியான ஆய்வு ஒன்றின்படி, வைட்டமின் சி, சளி அறிகுறிகளின் தீவிரத்தை சுமார் 15% குறைக்க உதவுகிறது. குறிப்பாக, கடுமையான அறிகுறிகள் இருக்கும்போது இது சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால், வெறும் ஆரஞ்சு சாறு மட்டும் போதுமான வைட்டமின் சி-யை வழங்காது.
பூண்டு : பூண்டு சளியைத் தடுக்கும் என்பதை சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. ஆய்வு ஒன்றில், 12 வாரங்கள் பூண்டு சாப்பிட்டவர்கள், பூண்டு சாப்பிடாதவர்களைக் காட்டிலும் குறைவான சளியால் பாதிக்கப்பட்டனர்.
துத்தநாகம் : அறிகுறிகள் தென்பட்ட 24 மணி நேரத்திற்குள், ஒரு நாளைக்கு 80-92 மி.கி துத்தநாகம் எடுத்துக் கொண்டால், சளியின் கால அளவு மூன்றில் ஒரு பங்கு குறையும் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, துத்தநாக மாத்திரைகள் (lozenges) தொண்டையிலேயே கரைவதால், வைரஸ்கள் செயல்படும் இடத்திலேயே பலன் தருகின்றன.
மேற்கூறிய அறிவியல் ரீதியான வழிகள் தவிர, பல வீட்டு வைத்தியங்கள் ‘மருந்துப்போலி’ (placebo) விளைவால் செயல்படுகின்றன. உதாரணமாக, சிலர் பால் குடித்தால் சளி அதிகரிக்கும் என நம்புகின்றனர். ஆனால், இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. அதேபோல், சிக்கன் சூப் போன்ற உணவுகள் சளியைக் குணப்படுத்துவதை விட, உடலுக்கு ஆறுதல் தந்து, நலமாக இருப்பதாக உணரச் செய்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால், சளியைக் குணப்படுத்த எந்த ஓர் அதிசய வைத்தியமும் இல்லை. ஆனால், சில ஊட்டச்சத்துக்கள் அதன் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன. எனவே, சீரான உணவு, போதிய ஓய்வு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவர் ஆலோசனையுடன் சரியான சிகிச்சை ஆகியவை மட்டுமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாகும்.
Read More : பழனியில் அர்ச்சகராக வேண்டுமா..? ரூ.10,000 ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி..!! விண்ணப்பிப்பது எப்படி..?