“எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்காதே!” என்று யாராவது சொன்னால், நமக்கு எரிச்சல் வருவது இயல்பு. ஆனால், அந்த எரிச்சலை விட நாம் செய்யும் மிதமிஞ்சிய யோசனை நம் உடலுக்குள் விளைவிக்கும் பாதிப்புகள் மிகவும் பயங்கரமானவை என எச்சரிக்கிறது மருத்துவ அறிவியல்.
மன அழுத்தம் (Stress) என்பது ஏதோ மனதோடு முடிந்துவிடும் விஷயம் என்று பலரும் நினைக்கிறோம். ஆனால், அது நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் மெல்ல மெல்ல விஷத்தைக் கலப்பதற்குச் சமமானது. சமீபத்தில் ‘ஹெல்தி மைண்டட்’ (Healthy Minded) அமைப்பு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, கட்டுப்படுத்த முடியாத எதிர்மறை எண்ணங்கள் நம் உடலை எப்படி சிதைக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, திரும்பத் திரும்ப வரும் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள், நம் உடலை எப்போதும் ஒருவித தற்காப்பு நிலையிலேயே வைத்திருக்கிறது. ஒரு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பிக்க உதவும் இந்தத் தற்காப்பு உணர்வு, தேவையில்லாமல் எப்போதும் நம் உடலில் நீடித்தால், அது உறுப்புகளைச் சோர்வடையச் செய்கிறது. குறிப்பாக, நாம் கவலையில் இருக்கும்போது உடலில் ‘கார்டிசோல்’ (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் அளவு கட்டுக்கடங்காமல் போகும்போது, அது இதயத்தைப் பலவீனப்படுத்துவதோடு, ஞாபக மறதி மற்றும் முடிவெடுக்கும் திறனையும் மழுங்கடிக்கிறது.
இந்த ஆய்வின் மிக முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், அதிகப்படியான சிந்தனை நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே நிலைகுலைய செய்கிறது. இதனால் சாதாரண நோய்த் தொற்று கூட நம்மை எளிதில் பாதிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இது ஏதோ கற்பனையான தகவல் அல்ல; நரம்பியல் மற்றும் உளவியல் ரீதியான சோதனைகளில், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூளைச் செயல்பாடுகளை அளவிட்டு இதனை நிரூபித்துள்ளனர்.
“மன அழுத்தம் உடனடியாக உயிரைப் பறிக்காமல் இருக்கலாம், ஆனால் அதைக் கவனிக்காமல் விட்டால் அது தீராத நோய்களுக்கு நுழைவு சீட்டாகிவிடும்” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே, எண்ணங்களைச் சீரமைக்கக் கற்றுக்கொள்வது என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது நம் உயிரைக் காக்கும் ஒரு கவசமும் கூட. அடுத்த முறை எதையாவது நினைத்து மணிக்கணக்கில் வருந்தத் தொடங்கும் முன், அது உங்கள் இதயத்தின் துடிப்பை தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



