இன்றைய டிஜிட்டல் உலகில், இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலகப் பணிகள், பொழுதுபோக்கு என பல காரணங்களுக்காக வீடுகளில் ஸ்மார்ட்போன், லேப்டாப், தொலைக்காட்சி என பல சாதனங்களை ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்க வைஃபை ரூட்டரின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
வைஃபை என்றால் என்ன..?
வைஃபை என்பது கம்பிகள் இல்லாமல் மின்னணு சாதனங்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இது கம்பிகள் இன்றி தகவல்களை அனுப்பி, பெற உதவுகிறது. “Wireless Fidelity” என்பதே இதன் விரிவாக்கம் என்று பலர் கூறினாலும், உண்மையில் இதற்குத் தனிப்பட்ட விரிவாக்கம் எதுவும் கிடையாது.
இவ்வாறு தினசரி தேவையாக மாறியுள்ள வைஃபை ரூட்டரை இரவில் தொடர்ந்து ஆன் நிலையில் வைத்திருப்பது சரியா? அது நமது உடல், நரம்பியல் அமைப்பு அல்லது மூளைக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விகள் பலரின் மனதிலும் எழுகின்றன. மனித மூளை செயல்பட மின்சார சிக்னல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாம் சிந்திப்பது, உணர்வுகளை வெளிப்படுத்துவது, உடலை இயக்குவது அனைத்தும் இந்த சிக்னல்கள் மூலமே நடக்கின்றன.
இதேபோல, வைஃபை மற்றும் மொபைல் போன்களும் மின்காந்த அலைகளைப் பயன்படுத்துவதால், அவை மூளையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும், இந்த அலைகளால் மூளையில் நேரடி பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை தெளிவான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இரவில் ரூட்டரை அணைப்பதால் கிடைக்கும் நன்மை :
இரவு நேரம் என்பது நமது உடலும் மூளையும் முழுமையாக ஓய்வெடுக்கும் முக்கியமான காலகட்டம். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சில உடல்நல நிபுணர்கள் ரூட்டரை படுக்கையறையில் வைக்காமல் இருப்பதற்கும், தூங்கும் வேளையில் அதை அணைத்து விடுவதற்கும் பரிந்துரைக்கிறார்கள். இது தவிர, மொபைல் போனையும் படுக்கைக்கு அருகில் வைக்காமல் சிறிது தூரத்தில் வைப்பது நல்ல பழக்கமாகும்.
பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை :
வைஃபை ரூட்டரைத் தொடர்ந்து ஆன் நிலையில் வைத்திருப்பதால் உடலுக்கு நேரடியாகத் தீங்கு விளைவிக்கும் என்று உறுதிப்படுத்தும் ஆய்வுகள் இதுவரை இல்லை என்றாலும், எந்தவொரு மின்காந்த அலைகளின் நீண்ட கால தாக்கம் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. எனவே, தேவையற்ற அலைவரிசை தாக்கங்களைத் தவிர்ப்பதற்காகவும், உடல்நலன் மற்றும் ஆரோக்கியமான ஆழ்ந்த தூக்கத்திற்காகவும் இரவில் தூங்கும் போது வைஃபை ரூட்டரை அணைத்து விடுவது, அல்லது குறைந்தது படுக்கையறையில் இருந்து விலக்கி வைப்பது போன்ற எளிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.



