கோடை வெப்பத்தை தணிக்க வீடுகளில் ஏர் கண்டிஷனரை (AC) பயன்படுத்துவது பெரும்பாலான மக்களின் பழக்கமாகிவிட்டது. ஆனால், குளிர் காலம் வந்தவுடன் ஏசியைப் பயன்படுத்தாமல் அப்படியே மூடி வைத்துவிடுகிறோம். உண்மையில், ஏசி என்பது வெப்பமான காலங்களில் மட்டுமல்ல, அதிக குளிராக இருக்கும்போதும் அறையின் வெப்பநிலையை சௌகரியமாக மாற்றப் பயன்படும் ஓர் இருவழிச் சாதனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹீட்டர் வசதியுடன் கூடிய ஏசிகள் :
உங்கள் ஏசியில் ‘ஹீட் மோட்’ (Heat Mode) அல்லது ‘ரிவர்ஸ் சைக்கிள் ஃபங்ஷன்’ (Reverse Cycle Function) என்ற அம்சம் இருந்தால், நீங்கள் தனியாக பணம் செலவழித்து ஹீட்டர்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஏசியையே ஒரு ஹீட்டராக பயன்படுத்தி, குளிர் காலத்தின்போது அறையின் வெப்பநிலையை சற்று சூடாக மாற்ற முடியும். இந்த வசதி கொண்ட ஏசிகள், குளிர் காலத்தில் அதன் செயல்பாட்டை மாற்றி, வெளியிலிருந்து வெப்பத்தை எடுத்து அறைக்குள் செலுத்தி, அறையைச் சூடாக்கும் வேலையைச் செய்கின்றன.
ஏசியை ஹீட்டராக மாற்றுவது எப்படி..?
* உங்கள் ஏசியின் ரிமோட்டில் உள்ள ‘ஹீட்’ பட்டனை அல்லது சூரியன் போன்ற குறியீட்டை கொண்ட பட்டனை அழுத்த வேண்டும்.
* பிறகு, உங்கள் ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை செட் செய்ய வேண்டும்.
* இந்த அம்சத்தை ஆன் செய்த உடனேயே, சில விநாடிகளுக்குக் குளிர்ந்த காற்று வருவதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ஹீட் மோட் ஆன் செய்யப்பட்ட ஒரு முதல் இரண்டு நிமிடங்களுக்குள், ஏசியிலிருந்து அறைக்குத் தேவையான வெப்பமான காற்று வரத் தொடங்கிவிடும்.
மேற்கண்ட இந்த எளிய முறையை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஏசியை ஒரு சில நிமிடங்களில் ஹீட்டராக மாற்றிக்கொள்ளலாம். ஆனாலும், ஏசியை ஹீட்டராகப் பயன்படுத்தும்போது, அறையின் வெப்பநிலையை 27 டிகிரி செல்சியஸுக்கு மேல் வைக்காமல் பார்த்துக்கொள்வது, அதன் நீண்டகால செயல்பாட்டிற்கு நல்லது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



