தமிழ்நாட்டில் பெண்கள் உரிமை மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும் நோக்கத்தில் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், அரசு நேரடியாக பெண் குழந்தையின் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்கிறது. இது, அந்த குழந்தை 18 வயது அடைந்த பின், கல்வி அல்லது திருமணச் செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த உதவித் தொகை திட்டம் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பெண் குழந்தை பிறக்கும் போது, அரசு அவரது பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக செலுத்துகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, இருவரின் பெயரிலும் தனித்தனியாக நிதி செலுத்தப்படுகிறது.
அதாவது, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால், அந்த குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ரூ.50,000 வரை தமிழ்நாடு அரசு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்துகிறது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ரூ.25,000 வீதம், நிரந்தர வைப்பு நிதியாக அவர்கள் பெயரில் செலுத்தப்படும்.
இந்த வைப்பு நிதி, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். குழந்தை 18 வயதை கடந்தவுடன், அந்த நிதி வட்டியுடன் சேர்த்து, முதிர்வுத் தொகையாக பெற்றுத் தரப்படும். இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு கீழ் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும். குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
உங்கள் வீட்டருகே உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள் :
* குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்
* வருமான சான்றிதழ்
* இருப்பிட சான்றிதழ்
* சாதி சான்றிதழ்
* பெற்றோரின் வயது சான்றிதழ்
* குடும்ப அட்டை
* கருத்தடை செய்யப்பட்டதற்கான சான்றிதழ்
* ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
* குடும்ப புகைப்படம்