ரத்த தானம் செய்வது ஒரு உன்னதமான செயல். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இது குறித்து மருத்துவர் அருண் கார்த்திக் என்ன சொல்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ரத்த தானம் செய்வதற்கு முன் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன
ரத்த சோகை (Anemia) : ரத்த தானம் செய்பவருக்கு ரத்த சோகை இருந்தால், அவரது உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இத்தகைய நிலையில் ரத்த தானம் செய்வது அவரது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தொற்று நோய்கள் : ரத்தம் பெறுபவருக்கு எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க, ரத்த தானம் செய்பவருக்கு இந்த நோய்கள் உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. தொற்று நோய்கள் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
நீரிழிவு நோய் பரவுமா..?
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்தால், அது ரத்தம் பெறுபவருக்குப் பரவாது. காரணம், நீரிழிவு நோய் என்பது ஒரு தொற்று நோய் அல்ல. ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது அவரது கணையத்தின் செயல்பாட்டை பொறுத்தது. ரத்தம் பெறுபவரின் கணையம் சரியாக செயல்பட்டால், அவர் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை அது சீர்செய்து கொள்ளும்.
உதாரணமாக, ஒரு தாய் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும், அவரது குழந்தைக்கு நீரிழிவு நோய் பரவாது. ஏனென்றால், தாயின் கணையமும், குழந்தையின் கணையமும் வெவ்வேறு. குழந்தையின் கணையம் ஆரோக்கியமாக செயல்பட்டால், அந்த குழந்தைக்கு நீரிழிவு நோய் வராது. அதேபோல் தான், நீரிழிவு நோய் உள்ள ஒருவர் ரத்த தானம் செய்தால், அது இன்னொருவருக்குப் பரவுவதில்லை.
எனவே, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால், நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். உங்களின் இந்த செயல் மற்றொரு உயிரை காப்பாற்ற உதவும். இருப்பினும், ரத்த தானம் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.



