அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தேடல்களில் இன்று பலரையும் கவலையடைய செய்யும் ஒரு விஷயமாக முகக்கொழுப்பு (Facial Fat) உருவெடுத்துள்ளது. உடல் எடை அதிகரிப்பு, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவையே இதற்கு முதன்மை காரணங்களாக கருதப்படுகின்றன. திரையில் தோன்றும் நடிகைகள் கூட இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டு, பின்னர் தங்களது வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலம் இதிலிருந்து மீண்டு வருவதை காண்கிறோம். இந்நிலையில், முகக்கொழுப்பு ஏற்படுவதற்கான ஆழமான பின்னணி காரணங்கள் குறித்து மருத்துவர் சிந்து சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.
மருத்துவர் சிந்துவின் கூற்றுப்படி, முகத்தில் கொழுப்பு சேருவதற்குப் பின்னால் மன அழுத்தம் (Stress) ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் கொழுப்பு படிவதற்கு உடல் எடை அதிகரிப்பு மட்டுமே காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் மன அழுத்தத்தின் போது சுரக்கும் ‘கார்டிசோல்’ (Cortisol) ஹார்மோனின் அளவு அதிகரிப்பதே இதற்கு அடிப்படை காரணமாகும். கவலைப்படுவது அல்லது புலம்புவது மட்டுமே மன அழுத்தம் அல்ல; சரியான உறக்கம் இல்லாததும் உடலுக்குப் பெரிய அழுத்தத்தைத் தரும் என்கிறார் அவர்.
இரவில் தாமதமாகத் தூங்கி, காலையில் தாமதமாக எழுவது சரியான உறக்கம் ஆகாது என அவர் எச்சரிக்கிறார். நமது உடலில் ‘மெலடோனின்’ (Melatonin) எனப்படும் உறக்கத்திற்கான ஹார்மோன் எப்போது உச்சத்தில் இருக்கிறதோ, அந்த நேரத்தில்தான் நாம் உறங்க வேண்டும். சூரியன் மறைந்த பிறகு இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும்.
ஆனால், இரவில் தாமதமாக சாப்பிடுவதும், கண் விழிப்பதும் பெண்களின் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை தூண்டி, மெலடோனின் சுரப்பை தடுத்து விடுகின்றன. எனவே, ஹார்மோன் சமநிலையை பேணவும், முகத்தில் கொழுப்பு சேருவதை தவிர்க்கவும் தினமும் இரவு சரியான நேரத்தில் உறங்க சென்று, குறைந்தது 7 மணிநேர ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டியது அவசியம்.
மேலும், உடற்பயிற்சி குறித்துப் பேசிய அவர், உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு அதீத உடற்பயிற்சி செய்வதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார். ஓய்வில்லாமல் உடலை வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்யும்போதும் கார்டிசோல் அளவு அதிகரித்து, தூக்கத்தை கெடுக்கும். இது மீண்டும் உடல்நலப் பாதிப்பிற்கே வழிவகுக்கும். எனவே, உடலுக்கு ஏற்ற மிதமான உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு ஆகிய இரண்டும் இணைந்த சீரான வாழ்க்கைமுறையே முகக்கொழுப்பை குறைப்பதற்கான எளிய மற்றும் நிரந்தர தீர்வாகும்.
Read More : ரூ.18 சிகரெட் இனி ரூ.72-க்கு விற்பனை..!! அமலுக்கு வருகிறது புதிய விலை..!! மத்திய அரசு தடாலடி உத்தரவு..!!



