தேமுதிக-வின் கூட்டணி குறித்த இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் அக்கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக-வின் கூட்டணி முடிவு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்து சாடியுள்ள ப்ளூ சட்டை மாறன், “உங்களுக்கு என ஒரு கொள்கை இருந்தால் இந்நேரம் சரியான கூட்டணியை தேர்வு செய்திருப்பீர்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறிவிப்பு வரும் என்று சொன்னவர்கள், பொங்கல் முடிந்து ஒரு மாதம் கடந்த பின்னரும் அமைதி காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக-வின் இந்த அமைதி என்பது ஏதோ ‘சாணக்ய தந்திரம்’ கிடையாது என்றும், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் யார் அதிக தொகுதிகளை தருகிறார்களோ, அங்கு தஞ்சமடையவே இந்த காத்திருப்பு என்றும் அவர் கிண்டலடித்துள்ளார். திராவிட கொள்கை மீது பற்று இருந்தால் திமுக பக்கமும், ஆரியம் மீது விருப்பம் இருந்தால் பாஜக-அதிமுக பக்கமும் சேர வேண்டியதுதானே, இதில் யோசிக்க என்ன இருக்கிறது என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களுக்கு உங்கள் கூட்டணி பற்றி எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள மாறன், “தேமுதிக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது” என்பது ஒரு பெரிய நகைச்சுவை என சாடியுள்ளார். தேமுதிக-வுக்கு உண்மையிலேயே மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால், தைரியமாக தனித்துப் போட்டியிட்டு அதை நிரூபிக்கலாமே என சவால் விடுத்துள்ளார். இவர்களின் வேகத்தை பார்த்தால் தேர்தல் முடிந்த பிறகுதான் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார்கள் போலிருக்கிறது என அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



