பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் கூட மேக்கப் போட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டு. இன்னும் சில பெண்கள் தினமும் மேக்கப் போடாமல் வெளியிலே செல்ல மாட்டார்கள். தினமும் மேக்கப் போடுவதால் சருமத்தில் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீக்கிரம் வயதான தோற்றம், சரும வறட்சி, அரிப்பு போன்ற பிரச்னைகள் வரும். மேக்கப் தினமும் போடுவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
மாய்ஸ்சரைசர் கருமை அபாயம்: சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க தினசரி மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும் போது சில வகை மாய்ஸ்சரைசர்கள் சரும நிறத்தை கருமையாக்கக் கூடும்.
லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள்: லிப்ஸ்டிக்குகளில் லெட், காட்மியம், குரோமியம், அலுமினியம் போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. அவை உதடுகள் வழியாக உடலுக்குள் சென்று மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கிரீம்கள் மற்றும் லோஷன்களின் விளைவுகள்: தினமும் க்ரீம், பாடி லோஷன், சோப் போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாடு சருமத்தில் அழற்சி, வறட்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பவுடர் மூலம் நுரையீரல் பாதிப்பு: முகப் பவுடரில் உள்ள கனிம துகள்களை சுவாசிப்பதன் மூலம், நுரையீரலில் நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேக்-அப் அகற்றாமல் தூங்குவது: இரவில் மேக்-அப் அகற்றாமல் தூங்கினால், சரும துளைகள் அடைபட்டு, நெகிழ்வுத்தன்மை குறையும். இதன் விளைவாக சுருக்கங்கள், சீக்கிரம் வயதான தோற்றம் உருவாகும்.
கண்களின் மென்மையான பகுதி பாதிப்பு: கண் சுற்றுப் பகுதி மிகவும் நுண்மையானது. கன்சீலர், மஸ்காரா, ஐ லைனர் போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் கண்களில் எரிச்சல், தொற்று மற்றும் கருவளையத்தை ஏற்படுத்தும்.
தினசரி மேக்-அப் பயன்படுத்துபவர்களுக்கு நிபுணர்கள் வழங்கும் சில முக்கிய பரிந்துரைகள்:
சாதனங்களை சுத்தம் செய்வது அவசியம்: மேக்-அப் பிரஷ்கள் மற்றும் ஸ்பாஞ்சுகள் போன்ற சாதனங்களில் எண்ணெய் பிசுக்கு, தூசி, பாக்டீரியாக்கள் தேங்கும். இதை குறைந்தது மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
சரும நிறத்திற்கு ஏற்ற பொருட்கள்: உங்கள் சரும நிறத்திற்கும் தன்மைக்கும் (சென்சிட்டிவ், எண்ணெய் பசை, உலர்) ஏற்ற பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான தேர்வு அலர்ஜி, வடுக்கள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
மலிவு, தரமற்ற பொருட்களை தவிர்க்கவும்: சந்தைகளில் மலிவாக கிடைக்கும், தரச் சான்றிதழ் இல்லாத பொருட்களில் உள்ள கெமிக்கல்கள், நீண்ட காலத்தில் சரும பாதிப்புகளையும், புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
பிரைமர் பயன்பாடு: மேக்-அப் போடும் முன் பிரைமர் பயன்படுத்துவது துளைகள், சுருக்கங்களை மறைத்து சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். இது எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி, மேக்-அப் நீண்ட நேரம் நீடிக்கவும் செய்யும்.
எக்ஸ்பைரி டேட் அவசியம்: பொருட்களின் காலாவதி தேதியைச் சரிபார்த்து, காலாவதியான பிறகு பயன்படுத்த வேண்டாம். அவை பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
சன்ஸ்கிரீன் முக்கியம்: வெளியில் செல்லும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியக் கதிர்களின் தீமையிலிருந்து பாதுகாக்கும். இது சரும கருமை மற்றும் சேதத்தை தடுக்கும்.
இயற்கை லிப் பாம்: செயற்கை லிப் பாம்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட லிப் பாம்கள் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
முக சுத்தம்: மேக்-அப் போடும் முன்பும், நீக்கும் பிறகும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இரவு நேர மாய்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
மேக்-அப்பிற்கு அப்பாற்பட்டும், போதுமான உறக்கம், சீரான உணவு, போதுமான நீர் குடிப்பு போன்ற பழக்கவழக்கங்களும் சரும அழகை மேம்படுத்த முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.