நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த, இட்லி மற்றும் தோசை மாவை மொத்தமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்துவது இன்றைய நவீன வாழ்க்கையில் வழக்கமாகிவிட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட பலருக்கும் இது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், இவ்வாறு நீண்ட நாட்கள் புளிக்க வைத்த மாவைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதற்குப் பதிலளிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள், பழைய மற்றும் புளித்த மாவைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் எச்சரிக்கை :
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் பொதுநல மருத்துவரான சஞ்சாரி தாஸ் கூறுகையில், உணவில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற, அதை புதியதாக இருக்கும்போதே சாப்பிடுவதுதான் சிறந்தது. ஆனால் இன்று பலர் ‘ஸ்மார்ட்டாக’ சிந்திப்பதாக நினைத்துக் கொண்டு, இட்லி மாவை அரைத்து 10 முதல் 14 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துகின்றனர்.
ஃப்ரிட்ஜில் வைப்பதால் மாவு புளிக்காமல் இருக்கும் என்று நினைப்பது தவறு என்று அவர் குறிப்பிடுகிறார். மாவை ஃப்ரிட்ஜில் வைத்தாலும், புளிக்கும் செயல்முறை தடைபடாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இது காலப்போக்கில் மாவை உடலுக்குக் கேடு விளைவிக்கும் பழைய மாவாக மாற்றுகிறது.
செரிமானப் பிரச்சனை :
புளித்த பழைய மாவை உட்கொள்வதால், அதில் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் காரணமாகப் பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர் எச்சரிக்கிறார்.
வாந்தி, செரிமானமின்மை, வயிற்றுக் கோளாறுகள், வயிற்றுத் தொற்று, நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல உபாதைகளுக்கு இந்த அதிகமான புளிப்பு மாவு வழிவகுக்கலாம். புளிக்க வைக்கப்பட்ட பிரெட், பான் கேக் போன்ற ஈஸ்ட் பயன்படுத்தப்படும் மற்ற உணவுகளுக்கும் இதே விதி பொருந்தும்.
24 மணி நேரம் தான் டைம் :
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இட்லி அல்லது தோசை மாவை அரைத்து, ஒருமுறை புளித்த பின் 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும். அதற்குப் பிறகு பயன்படுத்துவது நல்லதல்ல. அதிக நாட்களுக்கு வைத்துப் பயன்படுத்தும்போது, மாவு கெட்டியாகவோ அல்லது நீர்த்துப்போய் அதன் தன்மை மாறி, தோசையும் சரியாக வராது.
எனவே, மாவை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்க, அதை அரைத்த பிறகு உப்பு சேர்க்காமல் புளிக்க வைக்க வேண்டும். மாவு புளித்த பின், தேவைப்படும் அளவை மட்டும் எடுத்து உப்பு சேர்த்து உடனடியாக பயன்படுத்தி கொள்வது நல்லது.



