சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட்போன், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால், நம்மில் சிலர் செய்யும் ஒரு சிறிய தவறு, பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கலாம். ஸ்மார்ட்போனின் பின்புற கவரில் பணம், கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகளை வைப்பது மிகவும் ஆபத்தானது என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அல்லது சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பமடைகின்றன. இந்த வெப்பத்தை வெளியேற்றும் திறன் குறைவதால், பேட்டரி அல்லது செயலி சேதமடைய வாய்ப்புள்ளது. மொபைல் கவரில் வைக்கப்படும் பணம், அந்த வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கிறது. இதனால், அதிக வெப்பம் காரணமாக பேட்டரி வெடிப்புகள் அல்லது தீ விபத்துகள் ஏற்படலாம்.
அதேபோல, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள், மொபைல் உருவாக்கும் காந்தப்புலத்தால் சேதமடையக்கூடும். இதனால், கார்டுகளின் காந்தப் பட்டை தரவு பாதிக்கப்பட்டு, அவை செயலிழக்க நேரிடும். எனவே, இந்த அபாயங்களை தவிர்க்க, பணப்பை அல்லது தனி கார்டு ஹோல்டர்களைப் பயன்படுத்துவது நல்லது.
பாதுகாப்புக்கான எளிய வழிகள் :
* மொபைல் கவரில் பணம், நாணயங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை வைப்பதைத் தவிர்க்கவும்.
* மொபைலை எப்போதும் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருக்கவும்.
* பேட்டரியை அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.
* மொபைலுடன் வரும் அசல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்தவும்.
* சார்ஜ் செய்யும்போது கேம் விளையாடுவதையோ அல்லது வீடியோக்கள் பார்ப்பதையோ தவிர்ப்பது, பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவும்.