தமிழ்நாட்டில் படித்தும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களை, வெறும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக மாற்றுவதற்காக தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதுதான் UYEGP (Unemployed Youth Employment Generation Programme) என்ற திட்டம். தொழில் தொடங்க ஆவலுடன் இருக்கும் இளைஞர்களுக்கு இத்திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தங்கள் வியாபாரத் தொழில்கள் உட்பட அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலான முதலீட்டுத் தொகைக்கு வங்கிகளில் கடனாகப் பெறலாம். இந்தக் கடனுக்கு அரசுத் தரப்பில் சிறப்பான மானியம் வழங்கப்படுகிறது. மொத்த திட்ட முதலீட்டுத் தொகையில் 25% மானியமாகப் பெறலாம். ஒரு தனிநபர், அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை மானியமாகப் பெற முடியும். இந்த மானியம், ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கான ஆரம்ப நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைத்து, இளைஞர்களை ஊக்குவிக்கிறது.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு இந்த அடிப்படை கல்வித் தகுதியில் விலக்கு அளிக்கப்படுகிறது.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகவும், பெண்கள் மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவினர்: பெண்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோர் சிறப்புப் பிரிவின் கீழ் வருவார்கள்.
வருமான வரம்பு: விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
என்னென்ன தொழில்கள் தொடங்கலாம்?
வியாபார தொழில்கள்: மளிகைக் கடை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர்.
சேவை தொழில்கள்: ஸ்டேஷனரி கடை, மொபைல் போன்/உதிரிபாகங்கள் கடை, வாகன உதிரிபாகங்கள் வாங்கி விற்கும் தொழில் போன்ற பல விற்பனை சார்ந்த தொழில் முயற்சிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.msmeonline.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
Read More : கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெற வேண்டுமா..? விவசாயிகளே இந்த டிரிக்ஸை யூஸ் பண்ணுங்க..!!



