முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புனித தலம். இங்கு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, ஒரு சாதாரண பிரசாதமாக மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியுடன் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது.
சிவபெருமானின் புனித சின்னமாக விபூதி கருதப்பட்டாலும், திருச்செந்தூரில் அது பன்னீர் இலையில் வழங்கப்படுவதால், அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வழியில்லாமல் போனது. அப்போது அர்ச்சகர்கள், முருகப்பெருமானின் அருளில் நம்பிக்கை வைத்து, சம்பளத்திற்கு பதிலாக பன்னீர் இலையில் விபூதி வழங்க முடிவு செய்தனர்.
ஆரம்பத்தில் குழப்பமடைந்த தொழிலாளர்கள், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று உபயோகித்தனர். சில நாட்களிலேயே அவர்களின் உடல்நலம் மேம்பட்டது. உடல் வலி, சோர்வு நீங்கி, வேலை செய்யும் உற்சாகம் அதிகரித்தது. அன்றில் இருந்து, பன்னீர் இலை விபூதி தெய்வீக அருளாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
புகழ்பெற்ற மகரிஷியான விஸ்வாமித்திரர் ஒருமுறை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு, தியானம் மற்றும் யாகங்கள் செய்ய முடியாமல் தவித்தார். அப்போது, அவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை வேண்டினார். முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, “காலை வேளையில் என் கோவிலுக்கு வந்து, பன்னீர் இலையில் தரப்படும் விபூதியை உடலில் பூசி, சிறிதளவு உண்டு வந்தால் உமது நோய்கள் அனைத்தும் நீங்கும்” என அருள்புரிந்தார்.
பின்னர், முருகனின் வார்த்தையை ஏற்று, விபூதியை உபயோகித்த சில நாட்களிலேயே அவரது உடல்நலம் முழுமையாக குணமானது. இந்த கதை, பன்னீர் இலை விபூதி முருகனின் நேரடி அருளாசி என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. இன்றும், இந்த விபூதி உடல் நோய்கள், மனக்கவலைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கும் ஒரு ஆன்மீக சின்னமாக திகழ்கிறது.
Read More : குடும்பம் முதல் தொழில் வரை.. எந்த பிரச்சனைக்கு எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா..?