சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் ராட்வீலர் போன்ற வெளிநாட்டு ரக நாய்கள் தொடர்பாக முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். “ராட்வீலர் போன்ற ஆபத்தான நாய் இனங்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. எனவே வாய் மூடி இன்றி இந்த நாய்கள் வெளியில் அழைத்துவரப்படக் கூடாது” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவத்ஸவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெருநகர மாநகராட்சி கால்நடை தலைமை அதிகாரி டாக்டர் கமால் உசேன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கான விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்திருந்தார்.
அதன்படி, செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்றும் உரிமம் பெற ஆன்லைன் பதிவு, செல்லப்பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளரின் புகைப்படம், முகவரி மற்றும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உரிமம் வழங்கும்போது, செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு ஊசிகள் போடப்பட வேண்டும்.
அதேபோல், செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி செல்லும்போது, சாலையில் மலம் கழித்தால், அதற்கு உரிமையாளரே பொறுப்பு. அவர் தான் சுத்தம் செய்ய வேண்டும். இதுவரை 11,630 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 9ஆம் தேதி முதல் வெறிநாய் தடுப்பூசி முகாம்களும் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
விசாரணையின் போது, நீதிபதிகள், “சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன?” எனக் கேட்டதற்கு, மாநகராட்சி அதிகாரி, “2024-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20,000 நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன” என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், “தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு மீண்டும் அதே இடத்தில் விடுவதற்கு பதிலாக, அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் சிறப்பு காப்பகங்கள் அமைக்க முடியுமா..?” என்று கேள்வி எழுப்பினர். அதேபோல், நாய்களை துன்புறுத்தாமல் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தெருநாய்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், “நாய்க்கடி சம்பவங்களைத் தடுக்க எவ்வாறு செயல்படுகிறீர்கள்?, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்பதற்கான விரிவான அறிக்கையை சென்னை மாநகராட்சி 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Read More : இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி..!! அம்மனின் முழு அருளை பெற வீட்டிலேயே இதை செய்யலாம்..!!