வீட்டுக்கு தினசரி சமைக்கும் சமயத்தில், குறிப்பாக குழந்தைகளுக்காக சத்தான உணவைத் தயார் செய்யும் நேரத்தில் நாம் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்கள் பாதுகாப்பானவையா என்பது குறித்து பெரும்பாலோர் யோசிப்பதே இல்லை. ஆனால் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் எச்சரிக்கைகள், குறிப்பாக பழைய பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது தொடர்பாக சிந்திக்கத் தூண்டியுள்ளது.
தானேயிலுள்ள கிம்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனிகேத் முலே கூறுகையில், “பழைய பிரஷர் குக்கர்களில் இருந்து உணவில் கலக்கும் ஈயம் நச்சுத்தன்மை, குழந்தைகளுக்கு தீவிரமான உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் பாதுகாப்பு பெரியவர்களைவிட குறைவாகவே இருக்கும். எனவே, ஈயம் போன்ற நச்சுத்தன்மைகளை சமையல் வழியாக உட்கொள்ளும் போது, அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம்” என்றார்.
பிரஷர் குக்கரில் நீண்டகாலம் பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்களை எலும்பியல் நிபுணர் டாக்டர் மனன் வோரா விளக்கியுள்ளார். குக்கரில் தோன்றும் சிராய்ப்புகள், கருப்பு புள்ளிகள் போன்றவை உலோகங்களை உணவில் கலந்து விடும். இதில் ஈயம் மற்றும் அலுமினியம் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஈயம் ஒரு நேரடி நச்சாக செயல்படுகிறது. இது உடலில் சேரும்போது எளிதில் வெளியேற்றப்படாது. முற்றிலும் அகற்ற வேண்டும் என்றால், சிகிச்சையை நாட வேண்டும்” என்கிறார்.
இதன் தாக்கம் பெரும்பாலும் முதலில் தெரியாமல் போகலாம். முதலில் சோர்வு, தலைசுற்றல், நரம்பு பலவீனம் போன்ற எளிய அறிகுறிகள் தோன்றலாம். ஆனால், நீண்ட காலத்தில் மூளை செயல்பாடு குறைதல், நினைவாற்றல் பாதிப்பு, மனநிலை மாற்றங்கள், குழந்தைகளில் கற்றல் சிரமம், நடத்தை மாற்றங்கள் என பல்வேறு நிலைகளில் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
அதேசமயம், உங்கள் குக்கரில் சில குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால், அதை உடனே மாற்றுவது மிகவும் அவசியம். மூடி சரியாக பூட்டப்படாமல் தளர்வாக இருப்பது, விசில் சரியாக வேலை செய்யாதது, உணவில் இயற்கை வாசனை கெட்டு, உலோக வாசனை அதிகமாகத் தோன்றுவது, உள்ளே கீறல்கள் அல்லது கருப்பு நிற தடயங்கள் காணப்பட்டால் உடனே குக்கரை மாற்றுவது நல்லது.
முக்கியமாக, உங்கள் பிரஷர் குக்கர் எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும், 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டால் அதனை மாற்றுவது சிறந்த தீர்வாகும். வீட்டில் மருந்துகளுக்கான காலாவதியைப் போலவே, சமையல் பாத்திரங்களுக்கும் ‘காலக்கெடு’ இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Read More : அமலுக்கு வந்தது டீ, காஃபி விலை உயர்வு..!! புதிய விலை எவ்வளவு தெரியுமா..? சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!