கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைத்து மேலும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தது.
அதன்படி, கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்பட்டது. முன்னதாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில், ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலை ஆகியவை கவனமாக சரிபார்க்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணமும் குறுஞ்செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். தொகை எவ்வளவு அதிகரிக்கப்படும் என்ற தகவலை தேர்தலுக்கு முன்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆயிரம் ரூபாயாக இருக்கும் மகளிர் உரிமைத்தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது 1.3 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



