தமிழக அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த மௌனத்தை உடைத்து, வி.கே.சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க தயாராகிவிட்டார். ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என பொறுமை காத்து வந்த அவர், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்டப் பணிகள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வரும் சசிகலா, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார்.
சசிகலாவைச் சந்திக்க வரும் ஆதரவாளர்களுக்கு சிறப்புப் படிவங்கள் வழங்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் மற்றும் கட்சிப் பின்னணிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் அணியில் அதிருப்தியில் உள்ளவர்கள் சசிகலாவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அண்மையில் அமமுக நிர்வாகி ஜீவிதா நாச்சியார் நீக்கப்பட்டது மற்றும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தவெக-வில் இணைந்தது போன்ற நிகழ்வுகள், சசிகலாவை தனித்து இயங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது. டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தற்போதைய அரசியல் நகர்வுகளால், சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் மட்டுமே தற்போது ஓரம் கட்டப்பட்ட நிலையில் உள்ளனர்.
வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி, அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று, சசிகலா தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதியான பசும்பொன் மண்ணில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி, அங்கு வைத்து கட்சியின் பெயர், கொள்கை மற்றும் கொடியை அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார். 2017-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டுச் சென்ற சசிகலா, 4 ஆண்டுகாலச் சிறைவாசத்திற்குப் பிறகு தற்போது தனது சொந்தப் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், சசிகலாவின் இந்த தனிக்கட்சி அறிவிப்பு அக்கட்சியின் தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் சசிகலாவிற்கு இருக்கும் செல்வாக்கு, வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளைப் பிரிக்கும் காரணியாக அமையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



