சென்னை அருகே, கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் அமைந்துள்ள புதுப்பாக்கம், ஆன்மிக ரீதியாக ஒரு முக்கிய தலமாக வலம் வருகிறது. இங்குள்ள கஜகிரி மலை மீது எழுந்து நிற்கும் வீர ஆஞ்சநேயர் கோவில், பக்தர்களை தெய்வீகத்துடன் இணைக்கும் ஒரு சக்தி மிக்க இடமாக திகழ்கிறது.
108 படிகள் ஏறிச் சென்றால் மலை மீது அற்புதமாக, அமைதியாக அருள் செய்யும் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியும். இங்கு அடிக்கடி வந்து வழிபட்டு சென்றால் நம்முடைய கர்மவினைகள் அனைத்து அகலும் என சொல்லப்படுகிறது. இந்த மலைக்கோவிலில் கையில் சஞ்ஜீவி மலையை ஏந்திய படி, வடக்கு நோக்கி நாபிக்கமலத்தில் தாமரையுடன், அனுமன் வலது காலை பூமியில் ஊன்றியும், இடது காலை பறப்பதற்கு தயாராக இருப்பது போலவும் இருக்கும் நிலையில் அபய முத்திரை காட்டிய நிலையில் அருள் செய்கிறார்.
அதே போல் வாலில் மணி கட்டி, வாலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கோலத்திலும் காட்டி தருகிறார். ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிரில் ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணரின் சன்னதி உள்ளது. அங்கும் ராமரின் பாதத்திற்கு அமர்ந்த நிலையில் அனுமன் காட்சி தருகிறார்.
இங்கு பக்தர்கள் வெண்ணெய் காப்பு, சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்தும் ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள். இவரை வழிபடுவதால் தீய சக்திகளின் தொல்லைகள், நோய்கள், மன அழுத்தம், கவலை, திருமண தடைகள், பயம் போன்றவை நீங்கும். இங்கு வந்து பக்தர்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் நடக்கும் என சொல்லப்படுகிறது.
அமாவாசை நாளில், ராம நாமம் எழுதிய புதிய செங்கலுடன் கிரிவலம் செல்வது, வீடு கட்டும் யோகம் பெற வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஆஞ்சநேயர் கிரிவலத்திற்கு வருகிறார் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த சமயத்தில் பக்தர்களும் கிரிவலம் வந்தால் வாழ்க்கையின் பிரச்சனைகள் விலகி விரும்பிய நிகழ்வுகள் நடைபெறும் என்பது பொதுவான நம்பிக்கை.