நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில், சுயம்புவாக தோன்றிய அம்பாள் சிலையால் சிறப்புபெற்றது. நைனாமலை, போதமலை, கொல்லிமலை மற்றும் அலவாய்மலை ஆகிய நான்கு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கோயில், பக்தர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
முன்னொரு காலத்தில் வயல் வெளிகளில் உழுது வந்த விவசாயி ஒருவரின் வயலில் திடீரென ரத்தம் பீறிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அவர் கிராம மக்களைக் கூப்பிட்டு, அந்த இடத்தைத் தோண்டியபோது சுயம்புவாக அம்மன் சிலை வெளிப்பட்டது. பின்னர் சாமியாடியவரின் வாய்மூலம் “இங்கே கோயில் கட்டி வழிபட வேண்டும்” என்ற தெய்வீக உத்தரவு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில் ஊர் மக்கள் உடனே கோயில் கட்டி, அம்மனின் உருவ சிலையையும் பிரதிஷ்டை செய்தனர்.
இந்தக் கோயிலில் வழிபடும் மாரியம்மன், நித்திய சுமங்கலி மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள். நீண்டகாலம் சுமங்கலியாக வாழ விரும்பும் பெண்கள் இங்கு வந்தௌ பிரார்த்தனை செய்தால் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் விழா காலங்களில் மட்டும் கம்பம் நடப்படும். ஆனால் இக்கோயிலில், அம்பாளின் சன்னதிக்கு எதிரே வருடமுழுவதும் கம்பம் நிலைத்திருக்கிறது. அம்பாள் எப்போதும் தன் கணவனை நோக்கி நிற்கிறாள் என நம்பப்படுவதால், இங்கு தீர்க்கசுமங்கலியாக இருப்பதற்கான வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில், பழைய கம்பத்தை அகற்றி புதிய கம்பம் நடப்படுகிறது. பழைய கம்பத்தை அருகிலுள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு சென்று, அதற்கு தயிர் சாதம் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கம்பத்துக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி, அந்தப் பிரசாதத்தை உட்கொண்டால் விரைவில் மழலை சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பிற சிறப்புகள்:
* ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
* ஊஞ்சல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள அம்பிகையின் பாதத்தை வழிபட்டால், விரைவில் பிரார்த்தனை நிறைவேறும் என நம்பப்படுகிறது.
* கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகள் மட்டுமே உள்ளன; வேறு எந்த பரிவார தெய்வங்களும் இல்லை என்பது தனிச்சிறப்பு.