திருமாலின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உலகத்தில் தனியாக ஒரு கோவில் மட்டுமே உள்ளது என்பது பலருக்குத் தெரியாத உண்மை. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான கோலாதேவியில் அமைந்துள்ள இக்கோயில், ஆன்மிக வரலாறுகளும், ஆழமான பக்திப் புராணங்களும் இணைந்த புனிதத் தலமாக வலிமை பெற்று நிற்கிறது.
பொதுவாக பெருமாள் கோயில்களில் கருடன் சிறிய சன்னதியாக மட்டும் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு, கருடன் தான் மூலவர். பக்தர்கள் பெருமாளின் அம்சமாகவே கருடனை வழிபடுவதை இங்கே காணலாம். இதனால் தான், சர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் உள்ளிட்ட பல குற்றதோஷ நிவாரண தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது.
ராமாயணத்தில் இலங்கை மன்னனான ராவணன், சீதையை கடத்திச் சென்றான். அவனிடம் இருந்து சீதையை காப்பாற்றுவதற்காக ஜடாயு என்ற பறவை, ராவணன் சீதையை கடத்திச் சென்ற புஷ்பக விமானத்தில் ஏறி, ராவணனுடன் சண்டையிட்டது. ஆனால் ராவணன், ஜடாயுவின் சிறகுகளை தனது வாளால் வெட்டியதால், உயிருக்கு ஆபத்தால் நிலையில் போராடிக் கொண்டிருந்தது.
அந்த வழியாக வந்த ராம – லட்சுமணர்களிடம் ராவணன், சீதையை கடத்தி சென்ற விஷயத்தை சொல்லி, ராமரின் காலடியிலேயே உயிரை விட்டது. ராம பிரான் தனது கைகளாலேயே ஜடாயுவிற்கு இறுதிச் சடங்குகள் செய்து, அது உயிர் விட்ட இடத்திலேயே ஜடாயுவை அடக்கம் செய்தார்.
இந்தப் புனித இடத்தில் பிருகு மகரிஷி கருடன் சிலையை பிரதிஷ்டை செய்ததாகவும், பிற்காலத்தில் அதை ஸ்ரீ ராமானுஜர் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விதமாக ஜடாயுவின் கலியுக அவதாரம் கருடன் எனவும் இந்தக் கோயில் குறித்து நம்பிக்கை நிலவுகிறது.
மஹாபாரதத்தில் அர்ஜூன், வேட்டையின் போது விட்ட அம்பால் காடே தீப்பற்றி, பல பாம்புகள் கருகியது. இதனால் ஏற்படும் பாவத்திலிருந்து விடுபட, முனிவர் பரிந்துரைத்தபடி கருடனை வழிபட்டு சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டான் அர்ஜூன். இதுவும் இத்தலத்தின் புனித தன்மையை வலியுறுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
* 5.5 அடி உயர கருடன் மண்டியிட்ட நிலையில், வலது கரத்தில் மகா விஷ்ணு, இடது கரத்தில் மகாலட்சுமி திகழ்கிறார்கள்.
* மகாலட்சுமி பக்தர்களை நோக்கியபடி, கருடன் இருவரையும் தூக்கிச் செல்லும் அழகிய மந்திரக் காட்சி
* 1100 ஆண்டுகள் பழமையான கோயில், மொத்தம் 11 தெய்வ சன்னதிகள் கொண்டது.
* தினசரி பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், சர்ப்ப தோஷ நிவாரண நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
* கருடன் மீது பக்தி செலுத்துவோர், ஸ்ரீராமரின் அருளையும் பெறுவதாக நம்பப்படுகிறது. ஏனெனில், ஜடாயுவாக இருந்தபோது ராமரே சடங்குச் செய்ததால், தந்தை-மகன் பிணைப்பு இந்த தலத்தில் ஓர் ஆன்மிக அடையாளமாகவே விளங்குகிறது.
Read more: தனியார் பேருந்தில் குரூப்-4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதால் சர்ச்சை..!!