உலகின் மிகப் பழமையான ஹோட்டலாகக் கருதப்படும் நிஷியாமா ஒன்சென் கெய்யுன்கன், கிட்டத்தட்ட 1,400 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறது. ஜப்பானின் அகாய்ஷி மலைகள் அடிவாரத்தில், மவுண்ட் ஃபுஜி அருகே அமைந்துள்ள இந்த ஹோட்டல், கி.பி. 705-ஆம் ஆண்டு புஜிவாரா மஹிடோவால் நிறுவப்பட்டது. சிறப்பான விஷயம் என்னவென்றால், இது இன்றுவரை 52 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த ஹோட்டலைப் பார்க்க ஜப்பான் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். 2011ஆம் ஆண்டில், நிஷியாமா ஒன்சென் கியுங்கனை உலகின் மிகப் பழமையான ஹோட்டலாக கின்னஸ் உலக சாதனைகள் இதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
பல நூற்றாண்டுகளாக மரபுகளை காக்கும் அதே வேளையில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும் செய்து வருகிறது. முக்கிய ஈர்ப்பாக இயற்கை வெந்நீரூற்றுகள் விளங்குகின்றன. அதில் “மோச்சிடானி நோ யூ” (Mochitani no Yu) எனப்படும் சிறப்பு குளியலறை மிகவும் பிரபலமானது. இங்கு நீரூற்று நீர் நேரடியாக நிரப்பப்படுகிறது. அந்த நீரை விருந்தினர்கள் குடிப்பதும் வழக்கம், ஏனெனில் அதற்கு குணப்படுத்தும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.
வரலாற்றில், ஜப்பானிய சாமுராய்கள் முதல் சர்வதேச தலைவர்கள், பிரபலங்கள் வரை பலரும் இங்கு தங்கி சென்றுள்ளனர். தற்போது ஹோட்டலில் 37 பாரம்பரிய ஜப்பானிய பாணி அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் பாயும் நதி அல்லது அடர்ந்த காடுகளின் காட்சியை வழங்குகிறது. மலைப் பின்னணியில் திறந்தவெளி குளியலறைகள் விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை தருகின்றன.
இங்கு ஒரு இரவு தங்குவதற்கு சுமார் $408 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,000) செலவாகிறது. 1997-இல் மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல், இன்றும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. எனினும், அதன் நூற்றாண்டுகள் பழமையான வடிவமைப்பும் விருந்தோம்பல் மரபும் இன்னும் உயிரோடு திகழ்கிறது. உலகின் வரலாற்றையே பிரதிபலிக்கும் இந்த ஹோட்டல், பாரம்பரியம் மற்றும் ஆடம்பரத்தை இணைத்து விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.
Read more: கவனம்.. காலை எழுந்தவுடன் இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்ப சிறுநீரகப் பிரச்சனையாக இருக்கலாம்!