மருத்துவ அதீத சக்தி, ஆன்மிக விசுவாசம், ஜோதிட அதிசயங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே தரும் வைத்தீஸ்வரன் கோவில், பக்தர்களின் நம்பிக்கைக்கான புண்ணிய தலமாக விளங்கி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில், உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் முக்கிய சிவன் ஆலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. மருத்துவ சக்தி மிக்க தெய்வீக தலம் என கருதப்படும் இக்கோவிலில் வழிபட்டால், தோல் நோய்கள், இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பிணிகள் குணமாகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பக்தர்களிடையே நிலவி வருகிறது.
“வைத்திய + ஈஸ்வரன்” என்ற பெயரே, இங்கு மருத்துவ கடவுள் ஸ்ரீ வைத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார் என்பதை உணர்த்துகிறது. மேலும், நவகிரக பரிகார ஸ்தலங்களில் இதுவே செவ்வாய் பகவானுக்குரிய சிறப்பு தலம் ஆகும். உடலின் இரத்த ஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை செவ்வாய் கிரகம் சீராக்குவதாக நம்பப்படுகிறது.
கோவிலின் புனித குளம் “சித்தாமிர்த தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது. இதில் நீராடுபவர்களின் அனைத்து நோய்களும் குணமடையும் என பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும், கோவிலில் விபூதி வாங்கி வழிபடுவதன் மூலம் நீண்ட நாட்களாக குணமடையாத நோய்கள் கூட குணமடையும் என்பது மக்கள் நம்பிக்கை.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு நாடி ஜோதிடம். முனிவர் அகத்தியர் எழுதி வைத்த ஓலைச்சுவடிகள் மூலம், ஒருவரின் கைரேகையை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், முந்தைய பிறவி உள்ளிட்ட தகவல்கள் வாசிக்கப்படுகின்றன. விதியால் அழைக்கப்பட்டவர்களுக்கே அந்த ஓலைச்சுவடி கிடைக்கும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கையாகும்.
நாடி ஜோதிடம் எப்படி பிரபலமானது? முன் காலத்தில் நாடி ஜோதிடம் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஓலைச்சுவடிகளில் இருந்த புள்ளியில்லா எழுத்துக்களை பிழையில்லாமல் வாசிப்பதில் சிக்கல் இருந்தது. அந்த காலத்தில் வைத்தீஸ்வரன் அருகிலுள்ள குமார் நத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த வல்லுநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அருகிலுள்ள கிராமங்களில் ஜோதிடம் பார்த்து வந்தனர்.
இவர்களே ஓலைச்சுவடிகளில் இருந்த சிக்கலான எழுத்துக்களை வாசிப்பதில் திறமை பெற்றிருந்தனர். அதனால், நாடி ஜோதிடம் பார்ப்பதற்கான பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு, வல்லுநர் சமூக மக்கள், வைத்தீஸ்வரன் கோயிலுடன் இணைந்த குடும்பமாக பல தலைமுறைகளாக இன்று வரை ஐந்து தலைமுறைக்கு மேல் நாடி ஜோதிடம் பார்த்து வருகின்றனர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஜோதிடர்கள் சொன்ன விஷயங்கள் அப்படியே நடந்ததால், அவர்கள் அதை பிறரிடம் பகிர்ந்தனர். இதன் மூலம், நாடி ஜோதிடம் உலகம் முழுவதும் பேசப்பட்டு பிரபலமடைந்தது.
Read more: ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் என்ன செய்வது..? எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்..?