எந்தவொரு நாட்டின் போக்குவரத்திற்கும் மற்றும் பொருளாதாரத்தின் சுழற்சிக்கும் மிக இன்றியமையாத சக்தியாக எரிபொருள் (பெட்ரோல் மற்றும் டீசல்) விளங்குகிறது. இதன் விலையில் ஏற்படும் சிறு மாற்றம் கூட ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகள் குறித்த தரவுகளை இப்போது பார்க்கலாம்.
இந்த நாடுகள் பெரும்பாலும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருப்பதாலோ அல்லது தங்கள் நாட்டு மக்களுக்கு அரசு மானியங்களை அதிகளவில் வழங்குவதாலோ இந்த விலையில் எரிபொருளை வழங்குகின்றன.
டாப் 10 நாடுகள் எவை..?
மலிவான பெட்ரோல் விலை கொண்ட நாடுகளின் பட்டியலில் தென் அமெரிக்க நாடான வெனிசுலா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் $0.02 மட்டுமே ஆகும். இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.78 தான். அடுத்ததாக, மத்திய கிழக்கு நாடான ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை $0.09 (தோராயமாக ரூ.7.99) ஆகும்.
ஆப்பிரிக்க நாடுகள் இந்த பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. சூடான் ($0.14) மூன்றாவது இடத்திலும், அங்கோலா ($0.29) ஐந்தாவது இடத்திலும், நைஜீரியா ($0.32) ஆறாவது இடத்திலும் உள்ளன. கிழக்கு ஆசிய நாடான மலேசியா நான்காவது இடத்தில் (ஒரு லிட்டர் $0.28) உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளான குவைத் ($0.34), கத்தார் ($0.36), மற்றும் சவுதி அரேபியா ($0.39) ஆகியவை முறையே எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே இருக்கிறது. இந்த விலைக் குறைவுக்கு, எண்ணெய் உற்பத்தி மற்றும் அரசின் கொள்கைகளே முக்கிய காரணமாகும்.



