மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம், பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் மறைத்து வைத்த இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து உலகை மீட்கப் பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரமாகும். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போருக்குப் பிறகு, அசுரனை வென்று பூமாதேவியைக் காத்த வராகப் பெருமான், நாடு முழுவதும் பல கோயில்களில் அருள்பாலித்தாலும், திருமலை திருப்பதியில் உள்ள வராகப் பெருமாளின் கோயில் மிகவும் விசேஷமானது.
திருமலை திருப்பதி திருத்தலம் ஆதியில் வராகத் தலமாகவே இருந்துள்ளது. இங்குள்ள புஷ்கரணிக்கு ‘சுவாமி புஷ்கரணி’ என்று பெயர். அந்தப் புஷ்கரணியின் கரை மேல் அமைந்துள்ளதுதான் ஆதி வராக சுவாமி திருக்கோயில். ‘திருவேங்கட மலையில் உள்ள சுவாமி புஷ்கரணியில் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திர நாளில் தோன்றிய வராக பெருமாளுக்கு வணக்கம்’ எனப் பாத்ம புராணம் வராகரின் பெருமையை விளக்குகிறது. அன்று முதல் இன்று வரை, திருமலை திருப்பதியில் ஸ்ரீ வேங்கடவனுக்குரிய அனைத்துப் பூஜைகளும் முதலில் வராகப் பெருமானுக்கே செய்யப்பட வேண்டும் என்பதே தல நியதியாக உள்ளது.
வரலாற்றுப்படி, பக்தியில் சிறந்த ஒரு மன்னன் புற்றின் துவாரத்தில் தொடர்ந்து பசும்பாலை அபிஷேகம் செய்தபோது, அதனுள்ளிருந்து வராகப் பெருமான் தோன்றி காட்சியளித்ததாக ஒரு ஆன்மிகக் குறிப்பு உள்ளது. புராணங்களின்படி, சீனிவாசப் பெருமாள் கலி யுகம் முடியும் வரை இந்த மலையில் வசிக்க ஆசைப்பட்டபோது, அவரிடம் தங்க இடம் வேண்டி, ஆதி வராகப் பெருமானிடம் விண்ணப்பித்தார்.
அதற்கு வராகப் பெருமான், தனக்கு ஏதேனும் விலை கொடுத்து இடத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். உடனே சீனிவாசர், “இத்தலத்தில் எல்லோரும் உம்மையே முதலில் வணங்குவர். பால் திருமஞ்சனமும், நைவேத்தியமும் உமக்கே முதலில் நடைபெறும்” என்று உறுதியளித்தார். இதைக் கேட்டு மகிழ்ந்த வராகப் பெருமானும், சீனிவாசருக்கு 100 அடி விஸ்தீரணம் கொண்ட இடத்தைக் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
ஒரே திருத்தலத்தில் இரண்டு பெருமாளுக்கு முக்கியப் பூஜைகள் நடப்பது ஏற்புடையது அல்ல என்பதால், ஸ்ரீ ராமானுஜர் சீனிவாசப் பெருமாளுக்குப் பலிபீட பூஜை, ஹோமம், பிரமோத்ஸவம் முதலியவற்றை நடத்தும்படியான முறைகளை ஏற்படுத்தினார். ஆனால், சீனிவாசப் பெருமாளுக்குப் பூஜைகள் தொடங்குவதற்கு முன், வராகப் பெருமாளுக்கு முதல் பூஜை செய்யப்பட வேண்டும் என்ற நியதியை அவர் வகுத்தார். மேலும், திருமலை யாத்திரை செல்பவர்கள் முதலில் வராக தீர்த்தத்தில் நீராடி, ஆதி வராக விமானத்தை வணங்க வேண்டும் என்றும் அவர் வரையறுத்துள்ளார்.
இன்றும், வராகர் தோன்றிய ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திர தினத்தன்று உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருமலை திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள், முதலில் ஸ்ரீ வராகரை தரிசித்துவிட்டு, பின்னரே மலையப்பனை (சீனிவாசப் பெருமாள்) வணங்க வேண்டும் என்ற நியதி கடைபிடிக்கப்படுகிறது. அவ்வாறு வராகரை முதலில் வணங்கிவிட்டே சீனிவாசரை பூஜித்தால் மட்டுமே திருப்பதி பெருமாளின் வழிபாடு பூரணத்துவம் பெறும் என்கின்றனர் பக்தர்கள். இந்தச் சம்பவம், ‘விட்டுத் தருபவர்களுக்கே எப்போதும் முதலிடம்’ எனும் உன்னதத் தத்துவத்தை வராகப் பெருமாள் நமக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.
Read More : இலை பாறையாகும்.. மணல் விபூதியாகும்.. 2000 ஆண்டுகள் பழமையான சுருளி வேலப்பர் கோவில் மர்மங்கள்..!



