தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தை சார்ந்து இல்லாமல், பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்பதற்கு இந்த புதிய புள்ளிவிவரங்களே சாட்சி. ஒரு மாநிலத்தின் உண்மையான செழிப்பை அங்குள்ள மக்களின் தலா வருமானமே தீர்மானிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் டாப் 5 பணக்கார மாவட்டங்களின் பட்டியல் பல ஆச்சரியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் பின்னலாடை தலைநகரான திருப்பூர். ‘டாலர் நகரம்’ என்று அழைக்கப்படும் திருப்பூரின் ஒவ்வொரு வீதியும் ஒரு சிறு தொழிற்சாலையாகவே இயங்குகிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்கி, உலக நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இம்மாவட்ட மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 4.37 லட்சமாக உள்ளது. நான்காவது இடத்தில், தென்னிந்தியாவின் முட்டை கேந்திரமான நாமக்கல் மாவட்டம் உள்ளது. கோழி வளர்ப்பு, லாரி பாடி கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தும் இந்த மாவட்ட மக்களின் சராசரி வருமானம் ரூ. 4.74 லட்சமாக பதிவாகியுள்ளது.
அனைவரும் முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்த தமிழகத்தின் தலைநகரான சென்னை, இப்பட்டியலில் மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளது. ஐடி ஹப் மற்றும் வணிக மையமாகத் திகழும் சென்னையில் மக்களின் சராசரி வருமானம் ரூ. 5.77 லட்சமாக உள்ளது. இரண்டாம் இடத்தை, ஆன்மீகமும் பொருளாதாரமும் கைகோர்த்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் பெற்றுள்ளது. பட்டுச் சேலை வணிகம் மற்றும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் மூலம் இங்குள்ள மக்களின் சராசரி வருமானம் ரூ. 7.39 லட்சமாக உயர்ந்துள்ளது.
இறுதியாக, தமிழகத்தின் மிகப்பணக்கார மாவட்டமாக மகுடம் சூடுகிறது செங்கல்பட்டு. மின்னணு சாதன உற்பத்தி, ஆட்டோமொபைல் துறையின் அசுர வளர்ச்சி மற்றும் பிரம்மாண்டமான ஐடி பூங்காக்களின் சங்கமமாகத் திகழும் செங்கல்பட்டு, ரூ. 7.47 லட்சம் சராசரி வருமானத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னைக்கு மிக அருகாமையில் இருப்பதும், புதிய தொழில் முதலீடுகள் இங்கு குவிவதும் இந்த மாவட்டத்தின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Read More : “அடுத்த பட்ஜெட்டை தவெக தாக்கல் செய்யும்”..!! கொள்கை பரப்புச் செயலாளர் அருண்குமார் அதிரடி..!!



