ஆந்திராவில் பிறந்தாலும், சென்னையில் வளர்ந்தவர் நடிகை விஜயசாந்தி. சிறு வயதிலிருந்தே நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது புகைப்படங்களை பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். ஒருமுறை, இயக்குனர் பாரதிராஜாவின் கார் பஞ்சர் ஆக, அருகில் இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த விஜயசாந்தியின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் தனது ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
சில தமிழ்ப் படங்களில் நடித்த பின்னர், தெலுங்குத் திரையுலகிற்குச் சென்றார். அங்கு சிறுமியாக அறிமுகமாகி, முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 1990-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கர்தவ்யம்’ திரைப்படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தமிழில் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றி, தமிழில் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. பிறகு அவர் தொடர்ந்து பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவே நடித்தார். மேலும், இந்திய சினிமாவில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமையையும் விஜயசாந்தி பெற்றார். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழில் ரஜினிகாந்தின் ‘மன்னன்’ திரைப்படத்தில் பி. வாசு இயக்கத்தில் நடித்ததுடன், சில நேரடி தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். வயது காரணமாக, தெலுங்கில் அம்மா வேடங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ஒருபுறம் ஆந்திர அரசியலிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் பேட்டி அளித்தபோது, தனது வெற்றிக்குக் கணவர் அளித்த ஆதரவு குறித்துப் பகிர்ந்துகொண்டார். இன்று நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கும் நிலையில், 90-களிலேயே அந்தப் பட்டத்திற்குச் சொந்தக்காரர் விஜயசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.