இன்றைய காலகட்டத்தில் செல்போன் நமது டிஜிட்டல் அடையாளமாக மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் முதல் சமூக வலைதளங்கள் வரை அனைத்துக்கும் செல்போன் எண் அவசியமாகிறது. இந்தியாவில் செல்போன் சேவைகள் தொடங்கப்பட்டபோது, பயனர்களை எளிதில் அடையாளம் காணவும், நெட்வொர்க் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவும், நாடு முழுவதும் ஒரே அளவிலான செல்போன் எண்கள் இருக்க வேண்டும் என்று டிராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தன. இதற்காக, 10 இலக்க எண் வடிவம் தேர்வு செய்யப்பட்டது.
10 இலக்கங்கள் ஏன்..?
ஒரு 10 இலக்க எண்ணால், சுமார் 100 கோடி வெவ்வேறு எண் சேர்க்கைகளை உருவாக்க முடியும். இது, இந்தியாவின் பெரிய மக்கள் தொகைக்கு எதிர்காலத்திலும் போதுமானதாக இருக்கும். உதாரணமாக, 8 இலக்கங்கள் இருந்தால், பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அதேபோல், 12 அல்லது 13 இலக்கங்கள் இருந்தால், அதை நினைவில் வைத்துக்கொள்வது கடினமாக இருந்திருக்கும்.
எனவே, எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதற்கும், எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும் 10 இலக்கங்கள் ஒரு சிறந்த தேர்வாக கருதப்பட்டது. இந்தியாவில், செல்போன் எண்களின் முதல் இலக்கம் எப்போதும் 9, 8, 7 அல்லது 6-ல் தொடங்குகிறது. இது, அந்த எண் ஒரு செல்போன் நெட்வொர்க்குக்கு சொந்தமானது என்பதை குறிக்கிறது.
மேலும், சர்வதேச அழைப்புகளுக்கு இந்தியாவுக்கான குறியீடாக +91 பயன்படுத்தப்படுகிறது. இது உலகின் பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். தற்போது இந்தியாவில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், 10 இலக்க சேர்க்கைகள் போதுமானதாக இல்லாமல் போனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய எண் அமைப்பை அறிமுகப்படுத்தலாம். இருப்பினும், தற்போதைக்கு 10 இலக்கங்கள் போதுமானவையாக உள்ளன.