இந்திய கலாச்சாரத்தில், ஒரு சிறிய வீட்டில் உள்ள பூஜை அறையாக இருந்தாலும் சரி, பிரம்மாண்டமான ஆலயமாக இருந்தாலும் சரி, வழிபாட்டின் தொடக்கத்தில் மணி அடிக்கும் சடங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு மதப் பாரம்பரியமாக மட்டுமே கருதுகின்றனர். ஆனால், இந்த எளிய செயலுக்கு பின்னால், ஆன்மீக அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன.
எதிர்மறை ஆற்றலை நீக்கும் அதிர்வு : மணி ஓசை என்பது ஒரு சாதாரண இரைச்சல் அல்ல.. அது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சக்தி கொண்ட அதிர்வு. இந்த அதிர்வு வீட்டில் எதிரொலிக்கும்போது, அது சூழலில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்குகிறது என்று நம்பப்படுகிறது.
பூஜை அறையில் மணி அடிப்பதால், அங்கு உடனடியாக ஒரு நேர்மறையான சூழல் உருவாகிறது. இந்த ஒலி மனதை அமைதிப்படுத்தி, உணர்ச்சி அலைகளைக் கட்டுப்படுத்துகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மணி ஓசை வீட்டிற்கு மங்களத்தையும், அமைதியையும் கொண்டு வருவதால், பூஜையின்போது இதைச் செய்வது மிக அவசியமான சடங்காக உள்ளது.
மனதை ஒருமுகப்படுத்தும் ஒலி :
பூஜை செய்யும்போது நம் மனம் அடிக்கடி சிந்தனைகளில் அலைபாயும். அத்தகைய சூழ்நிலையில், மணியின் கூர்மையான, தெளிவான சத்தம், நம் கவனத்தை மீண்டும் பூஜையின் பக்கம் திருப்புகிறது. இது பக்தியை அதிகரிப்பதுடன், மனதிற்கு ஆன்மீக அமைதியையும் தருகிறது. அறிவியல் ரீதியாகப் பார்க்கையில், இந்த ஒலியானது மூளையில் உள்ள நரம்புகளை தூண்டி, செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது.
அதேபோல் வீட்டில் தொடர்ந்து பதற்றமும், அமைதியின்மையும் நிலவினால், பூஜை அறையில் மணி அடிப்பதன் மூலம் அந்த சூழ்நிலையை அமைதிப்படுத்த முடியும். இது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள குழப்பங்களை குறைத்து, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, வீட்டில் ஒரு ஆறுதலான சூழலை ஏற்படுத்தும்.
மணியின் உலோகமும் அதன் விளைவுகளில் ஒரு பங்களிக்கிறது. பொதுவாக, பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட மணிகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றன. இந்த உலோகங்களின் ஒலி வளிமண்டலத்தில் சக்திவாய்ந்த நேர்மறை அதிர்வுகளை பரப்புவதால், கோயில்களில் பெரும்பாலும் இந்த உலோகங்களால் செய்யப்பட்ட மணிகளே பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு பின்னால் உள்ள மற்றொரு சுவாரஸ்யமான காரணம், மணி அடிப்பது கடவுள்களை வழிபாட்டிற்கு அழைப்பதற்கான ஒரு சிக்னலாக கருதப்படுகிறது. மணி ஓசையின் மூலம் பக்தர்கள், “வழிபாடு தொடங்கிவிட்டது, கடவுளே வருக” என்று அழைப்பதாகவும், மத நம்பிக்கையின்படி, இது கடவுளை மகிழ்வித்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது.
Read More : நவராத்திரி பூஜையில் அசைவ விருந்து படைக்கும் மக்கள்..!! எங்கு தெரியுமா..?