விநாயகர் சதுர்த்தி என்பது பக்தி பூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும் தமிழர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வருகிற இந்த தினத்தில், வீடுகளில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள், நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன. அந்த நைவேத்தியங்களில் முதன்மையானது கொழுக்கட்டை மற்றும் மோதகம்.
ஒரு காலத்தில், ஞானபாலி எனும் மன்னன், விநாயகரின் பக்தராக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தினசரி பூஜைகள், தியானங்கள் மூலம் விநாயகரை வழிபட்டு வந்தார். ஆனால், அவரது நாட்டில் ஒருகாலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்களை பாதுகாக்கும் நோக்கில், தனது ராஜகுருவின் ஆலோசனையுடன் ஒரு பெரிய யாகம் நடத்தினார். ஆனால் அந்த யாகம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், மேனகை என்ற தேவலோக நடன மங்கையை கண்டு, தனது பக்தி வழியிலிருந்து சற்றே விலகி, யாகத்தை பாதியில் நிறுத்திவிட்டார் ஞானபாலி.
இதனால் கொந்தளித்த அஷ்டதிக்கு பாலகர்கள், ஞானபாலிக்கு சாபம் அளித்து, அவர் ஒரு ஒற்றைக்கண் அரக்கனாக மாற வேண்டிய நிலையை ஏற்படுத்தினார்கள். சாபத்தால் உருவான அரக்கன், மக்கள் மீது கொடுமை செய்து, நாட்டையே அச்சுறுத்தும் நிலைக்கு வந்தான். ஆனால், விநாயகர் வழிபாட்டை மட்டும் கைவிடவில்லை. தனது பக்தி வழியைக் கைவிடாத ஞானபாலியை, பிள்ளையார் எதிர்த்து போரிட்டபோதும், உண்மை உணர்ந்ததும் அவர் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டான்.
அவரின் உண்மையான பக்தியால் பரவசமடைந்த விநாயகர், ஞானபாலிக்கு மன்னிப்பளித்து, “எப்போதும் தன்னுடன் இருக்க விரும்பும்” என்ற அவரது ஆசையை ஏற்று, அரக்கனை ஒரு கொழுக்கட்டையாக மாற்றி விழுங்கினார் எனக் கூறப்படுகிறது. அதனால் தான், விநாயகர் வழிபாட்டின் ஒரு அங்கமாக, கொழுக்கட்டை நைவேத்தியமாக படைக்கப்படும் ஆன்மீக மரபு தொடங்கியது.
மேலும், மோதகத்தின் பின்புலத்துக்கும் ஒரு அழகான புராணக் கதை உள்ளது. சிவன், பார்வதி மற்றும் விநாயகர் ஆகியோர், அர்த்தி ரிஷியின் மனைவியான அனுசுயா நடத்திய விருந்துக்கு சென்றபோது, விநாயகரின் பசியை எந்த உணவாலும் தணிக்க முடியவில்லை. அனுசுயா, தனது ஞானத்துடன், இனிப்பும், திருப்தியும் கொண்ட மோதகத்தை அளிக்க, விநாயகர் மகிழ்ச்சியடைந்தார். அதன் நினைவாகவே 21 மோதகங்களை நைவேத்தியமாக அளித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட பார்வதி தேவி, அன்பும் பக்தியும் கொண்டு விநாயகருக்கு மோதகம் படைக்கும் ஒருவர், அவருடைய வேண்டுதல்களை பிள்ளையார் நிறைவேற்றுவார் என்று வரமளித்தார். அதன்படி, விநாயகரிடம் மனமார வேண்டி, மோதகம் படைக்கும் வழிபாடுகள், இன்றும் தொடர்கின்றன.
இந்த முறைகள் வெறும் சடங்குகளாக அல்ல, பக்தியும், தியாகமும், ஆன்மீக நம்பிக்கையும் அடங்கிய அடையாளங்களாக உருமாறி, தலைமுறைகளை கடந்தும் தொடர்கின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை, மோதகங்களை நைவேத்யமாக சமர்ப்பிக்கின்ற வழக்கம், அதனால் ஏற்படும் ஆனந்தமும், ஒரு பக்தனின் மனஉணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன.
Read More : இந்த பரிகாரம் செய்தால் திருமண வரன் உங்களை தேடி வரும்..!! ஓலைச்சுவடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்..!!