வங்கிச் சேவைகளை விரல் நுனியில் கொண்டு வந்த ஏடிஎம் (ATM) இயந்திரங்கள், இன்றைய நவீன வாழ்வியலில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. வங்கிகளுக்கு நேரில் செல்லும் அவசியத்தைக் குறைத்து, பணப்பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ள இந்த இயந்திரங்களுக்குப் பின்னால் பல சுவாரஸ்யமான தொழில்நுட்ப உண்மைகள் ஒளிந்துள்ளன. அதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு கேள்வி என்னவென்றால், “ஒரு ஏடிஎம் இயந்திரத்திற்குள் அதிகபட்சமாக எவ்வளவு பணம் நிரப்பப்படும்?” என்பதுதான்.
சாதாரணமான நேரங்களில் பணம் எடுக்கச் செல்லும்போது, சில சமயம் ‘பணம் இல்லை’ (No Cash) என்ற அறிவிப்பு நம்மை ஏமாற்றமடைய செய்யும். அந்தச் சமயங்களில் தான் இந்த இயந்திரத்தின் கொள்ளளவு குறித்த சந்தேகம் நமக்குள் எழுகிறது. தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ஏடிஎம் இயந்திரங்களுக்குள் ‘கேஷ் கேசட்’ (Cash Cassette) எனப்படும் பிரத்யேகப் பணப்பெட்டிகள் இருக்கும். இந்த பெட்டிகளுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தாள்களை மட்டுமே அடுக்க முடியும்.
பொதுவாக, ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் 8,000 முதல் 10,000 வரையிலான ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் நிரப்ப முடியும். உதாரணத்திற்கு, இயந்திரத்தில் உள்ள அனைத்து அடுக்குகளிலும் 500 ரூபாய் நோட்டுகளை மட்டுமே நிரப்பினால், அதன் மொத்த மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும். ஆனால், நடைமுறையில் அனைத்து பெட்டிகளிலும் 500 ரூபாய் தாள்கள் மட்டுமே வைக்கப்படுவதில்லை. பொதுமக்களின் சில்லறைத் தேவையைக் கருத்தில் கொண்டு 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் கலந்தே வைக்கப்படுகின்றன. இதனால் அந்த இயந்திரத்தில் இருக்கும் மொத்தப் பணத்தின் மதிப்பு மாறுபடுகிறது.
ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்பதை அந்தந்த வங்கிகளே தீர்மானிக்கின்றன. குறிப்பாக, அந்த இயந்திரம் அமைந்துள்ள இடத்தின் மக்கள் நடமாட்டம் மற்றும் பணத்தேவையை பொறுத்து இந்த அளவு மாறுபடும். மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அல்லது பேருந்து நிலையங்களில் உள்ள ஏடிஎம்களில் அதிகப்படியான பணமும், குடியிருப்புப் பகுதிகளில் ஓரளவு குறைவான பணமும் நிரப்பப்படும். சராசரியாக கணக்கிட்டால், ஒரு சாதாரண ஏடிஎம் இயந்திரத்தில் 20 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை பணம் இருப்பு வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.



