தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் ‘கங்கா ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை வெடித்துப் பொதுமக்கள் இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது பட்டாசு வெடிப்பதைத்தான். வண்ணமயமான வானவெடிகளையும், சத்தமிடும் பட்டாசுகளையும் வெடித்து மகிழ்வது தீபாவளியின் பிரிக்க முடியாத பாரம்பரிய அங்கமாக உள்ளது.
பட்டாசு வெடிப்பதற்கான காரணம் என்ன..?
பட்டாசு வெடிப்பதன் பின்னால் ஒரு ஆழமான ஆன்மீக அர்த்தம் இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர். மனிதர்களிடம் உள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியம் போன்ற தீய குணங்கள் நீங்க வேண்டும் என்பதன் குறியீடாகவே தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது.
இந்தப் பட்டாசுச் சத்தம், அந்தத் தீய குணங்களைத் தூள் தூளாக்குவதன் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், தீபாவளியன்று புத்தாடை அணிதல், கங்கா ஸ்நானம், தீப ஒளி வழிபாடு ஆகியவை நமது முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய மரபுகளாகும். அந்த வரிசையில் பட்டாசு வெடிப்பதும் மகிழ்ச்சி மற்றும் ஆன்மிகச் சின்னமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
பாரம்பரியம் Vs சுற்றுச்சூழல் பாதுகாப்பு :
இருப்பினும், சமீபகாலமாகச் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து கவலை தெரிவிக்கும் சிலர், பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மற்றொரு தரப்பினர், “ஆண்டு முழுவதும் வாகனங்கள், தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் மாசுபாடு குறித்து யாரும் பேசுவதில்லை. ஆனால் ஒரே ஒரு நாள் வெடிக்கப்படும் பட்டாசுகளுக்கு மட்டும் குற்றம் சாட்டுவது சரியானதல்ல” என்று வாதிடுகின்றனர்.
இந்த விவாதம் தொடர்ந்தாலும், அரசு சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேரக் கட்டுப்பாடுடன் தீபாவளி கொண்டாடுவதன் மூலம், பாரம்பரிய மகிழ்ச்சியைத் தக்கவைப்பதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருசேர நிலைநாட்ட முடியும் என்று நம்பப்படுகிறது.



