ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக கொளுத்தும் வெயிலில், குளிர்ச்சியாக உருகும் ஐஸ்கிரீமை சாப்பிடுவது ஒரு நிம்மதி. ஆனால் ஐஸ்கிரீமில் உள்ள ஒரு ரசாயனம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மோகனா வம்சி இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சில ஐஸ்கிரீம்கள் உடனடியாக உருகுவதையும், சில ஐஸ் கீரிம்கள் சில நிமிடங்கள் கழித்து உருகுவதையும் நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் பாலிசார்பேட் 80’ எனப்படும் குழம்பாக்கி வேதிப்பொருளாகும். இந்த குழம்பாக்கிகள் பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. அவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
சமீபத்திய ஆய்வுகள் பல இந்த குழம்பாக்கிகள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிப்பதாக எச்சரித்துள்ளன. அவை செரிமான அமைப்பில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும், அவை குடல் அழற்சி நோயை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் கார்பாக்சி மெத்தில் செல்லுலோஸ் மற்றும் மால்டோடெக்ஸ்ட்ரின் போன்ற இரசாயனங்கள் இந்த வகைக்குள் அடங்கும். பிரான்சில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், இந்த இரசாயனங்கள் குடல் நுண்ணுயிரிக்கு தீங்கு விளைவிப்பதாகக் காட்டுகின்றன.
சில நிறுவனங்கள் தங்கள் பிராண்டுகளில் குழம்பாக்கிகள் இல்லை என்று விளம்பரப்படுத்துகின்றன. நுகர்வோர் இவற்றை அடையாளம் காண்பது மிகவும் கடினம். எனவே, தொகுப்பில் உள்ள லேபிளை மிகவும் கவனமாக ஆராய வேண்டும் . இந்த குழம்பாக்கிகள் உள்ள உணவுகளை நாம் சாப்பிடாமல் இருந்தால் நமது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



