சண்டை போடாத தம்பதிகள் இருக்க முடியாது. ஆனால், அந்த சண்டைகளை நீடிக்க விடாமல், உறவில் பிணைப்பையும் நெருக்கத்தையும் அதிகரிப்பதே தாம்பத்தியத்தின் வெற்றி. சின்ன சின்ன ஊடல்கள் உறவுக்கு ருசி சேர்ப்பவைதான் என்றாலும், நீண்ட மௌனமோ அல்லது தவறான வெளிப்பாடுகளோ சிக்கல்களை அதிகரிக்கலாம். சண்டைகளைக் கடந்து கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க உதவும் சில நடைமுறை வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈகோவைத் தவிர்த்து சமாதானம் பேசுங்கள் :
சண்டை வரும்போது ஈகோ தலைதூக்க விடாமல் கவனமாக இருக்க வேண்டும். தவறு யார் மீது இருந்தாலும், தானாகவே முன்வந்து மன்னிப்பு கேட்பதோ, பேசுவதோ கௌரவம் பார்க்கும் விஷயம் அல்ல. பேசாமல் தனித்தனி அறையில் காத்திருப்பது, பிரச்னையைத்தான் பெரிதாக்கும். பேசி முடித்த பிறகு, நடந்த எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், மீண்டும் உறவைத் தொடர்வதுதான் சமாதானத்தின் முதல் படி.
திறந்த தகவல் தொடர்பை பேணுங்கள் :
தம்பதிகளுக்குள் பேச்சுவார்த்தை குறைந்தாலே, அங்கே சிக்கல்கள் ஆரம்பமாகிவிட்டன என்று அர்த்தம். எந்த எதிர்பார்ப்பாக இருந்தாலும், வாயை திறந்து பேசி வெளிப்படுத்துவதே சிறந்தது. ஒரு நல்ல நண்பராகப் பழகுவது, மனம் விட்டுப் பேசுவது, எல்லாவற்றிற்கும் மேலாகத் துணை என்ன சொல்ல வருகிறார் என்பதைக் காது கொடுத்துக் கேட்பது ஆகியவை சுமுகமான உறவுக்கு வழிவகுக்கும்.
பொருளாதார பிரச்சனையில் வெளிப்படைத்தன்மை :
தம்பதிகளுக்கு இடையே சண்டை வர முக்கிய காரணமாக இருப்பது பணப் பிரச்னைதான். செலவுகள், சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்து இருவரும் வெளிப்படையாகக் கையாள்வதும், விவாதிப்பதும் அவசியம். நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இருக்குமானால், பணம் தொடர்பான சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிடும்.
தோற்றத்திலும் உடையிலும் கவனம் தேவை :
வீட்டு வேலைகள் அதிகம் இருந்தாலும், நம்மை நாமே அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்வது அவசியம். வேலை முடிந்து இரவு உறங்கச் செல்லும்போது வியர்வை நாற்றத்துடன் அழுக்கு நைட்டியுடன் உறங்கச் செல்வது, விரும்பத்தகாத வாசனையை ஏற்படுத்தி நெருக்கத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. உடலின் சுத்தத்திலும், தோற்றத்திலும் கவனம் செலுத்துவது துணையின் இணக்கத்தை அதிகரிக்கும்.
உறவுகளையும் சமமாக மதியுங்கள் :
கணவன் வீட்டு உறவாக இருந்தாலும் சரி, மனைவி வீட்டு உறவாக இருந்தாலும் சரி, இரு தரப்பினரையும் சமமாக மதித்து நடத்துவது பிரச்னைகள் எழுவதைத் தடுக்கும். தன் வீட்டு உறவுகளை மட்டுமே உயர்த்திப் பேசுவதும், எதிர் தரப்பினரின் உறவுகளை மதிக்காமல் இருப்பதும் சண்டைகளுக்குக் காரணமாகலாம். எனவே, இரு குடும்ப உறவுகளையும் சமமாகப் பேணுவது சுமுகமான உறவுக்கு அத்தியாவசியம்.
அன்பால் வசப்படுத்துங்கள் :
தம்பதிகள் காதல் மொழி பேசுவதற்கும், பாசமழை பொழிவதற்கும் காதலர்களாக இருக்க வேண்டியதில்லை. சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது நெருக்கத்தை அதிகரிக்கும். அன்பு செய்வதுதான் ஒருவரை ஒருவர் வசப்படுத்தும் சிறந்த ஆயுதம் என்பதை உணர்ந்து, மனம் விட்டுப் பேசுவதன் மூலம் உறவுகளைப் பலப்படுத்தலாம்.



