GST | வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு விநியோகத் துறையில், இனி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு காத்திருக்கிறது. ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களின் டெலிவரி கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய வரி விதிப்பு, வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுவரை, உணவுக்கான ஜிஎஸ்டி (5%) மட்டுமே ஆன்லைன் பில்களில் சேர்க்கப்பட்டது. ஆனால், இனி டெலிவரி கட்டணத்திற்கும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். உதாரணமாக, நீங்கள் ரூ.200-க்கு பிரியாணி ஆர்டர் செய்தால், உணவுக்கான 5% ஜிஎஸ்டி, அதோடு டெலிவரி கட்டணத்திற்கான 18% ஜிஎஸ்டி என இரட்டை வரிச் சுமை உங்கள் பில்லில் சேர்க்கப்படும். இதனால், மொத்த விலையில் சுமார் 40% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவால், பிளிங்கட், ஜெப்டோ போன்ற க்விக் காமர்ஸ் நிறுவனங்களும் வரி விதிப்புக்குள் வருகின்றன. நீண்ட நாட்களாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கும், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கும் இடையே நிலவி வந்த சட்டச் சிக்கல்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு தீர்வாக அமைகிறது. இந்தச் சுமை நேரடியாக நுகர்வோரின் தலையில்தான் விழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்யும்போது, டெலிவரி கட்டணமும் விலை அதிகமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாறாக, அருகில் உள்ள கடைக்குச் சென்று சாப்பிடுவது அல்லது பார்சல் வாங்கி வருவது பணத்தையும், ஆரோக்கியத்தையும் ஒரு சேர மிச்சப்படுத்தும். அந்த டெலிவரி செலவில் உங்கள் பிரியாணிக்கு ஒரு கூடுதல் சைடிஷ் வாங்கி சாப்பிடலாம்.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் டெலிவரி சேவைகளுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது. ஏனென்றால், அங்கு டெலிவரி என்பது பொருளுக்கான சேவையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.