திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்கள் என்றாலே நிச்சயம் மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த வில்லன் ஒரு வெற்றிகரமான ஹீரோ என்று அறியும்போது ஆச்சரியப்படுகிறோம். பாலிவுட்டில் தனது நடிப்புக்காகப் பிரபலமான டேனி டென்சோங்பாவின் கதையும் அப்படித்தான்.
வெள்ளித்திரையில் பயமுறுத்தும் வில்லனாகத் தோன்றிய டேனி… திரைக்குப் பின்னால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வணிக சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். அவர் எப்படி மதுபான அதிபர் விஜய் மல்லையாவை வீழ்த்தி வடகிழக்கு இந்தியாவின் ‘பீர் ராஜா’ ஆனார் என்று பார்க்கலாம்..
சிக்கிம் மலைகளிலிருந்து மும்பை ஸ்டுடியோக்கள் வரை:
டேனியின் உண்மையான பெயர் ஷெரிங் ஃபின்ட்சோ டென்சோங்பா. அவர் சிக்கிமில் உள்ள யுக்சோம் என்ற தொலைதூரப் பகுதியில் பிறந்தார். ஆரம்பத்தில், அவர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய விரும்பினார். ஆனால் 1962 போருக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர். அதனால் அவர் தனது பாதையை மாற்றி புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அந்தப் பெயரை உச்சரிக்கக் கடினமாக இருந்ததால், அங்குள்ள அவரது நண்பர்கள் அவரது பெயரை ‘டேனி’ என்று மாற்றினர்.
1971-ல் வெளியான ‘மேரே அப்னே’ என்ற படத்தின் மூலம் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அன்று முதல், தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து ஒரு பிரபலமான கலைஞராக ஆனார். ‘அக்னிபத்’, ‘ரோபோ’, ‘பேபி (2015)’ போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
திரையில் வில்லன்… நிஜ வாழ்க்கையில் தொழிலதிபர்:
படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், டேனியின் கவனம் வியாபாரத்தின் மீது இருந்தது. “நடிப்பு என்பது என் பொழுதுபோக்கு மட்டுமே… வியாபாரம் தான் என் வாழ்வாதாரம்,” என்று பலமுறை கூறியுள்ளார். 1987-ல், அவர் தனது சொந்த மாநிலமான சிக்கிமில் ‘யுக்சோம் ப்ரூவரீஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவினார். மற்றவர்களைப் போல பெரிய நகரங்களில் கவனம் செலுத்தாமல், தனக்கு நன்கு தெரிந்த வடகிழக்கு மாநிலங்களின் சந்தையில் தனது காலடியை நிலைநிறுத்தினார். படிப்படியாக, அவர் தனது தொழிலை ஒடிசா மற்றும் அசாம் நோக்கி விரிவுபடுத்தினார்.
விஜய் மல்லையாவைத் தடுத்த வியூகம்:
இதுதான் வியாபாரத்தில் டேனியின் மிகப்பெரிய மாஸ்டர் பிளான். 2009-ல், மதுபான அதிபர் விஜய் மல்லையாவின் ‘யுனைடெட் ப்ரூவரீஸ்’ நிறுவனம் வடகிழக்கு இந்தியாவின் மீது தனது பார்வையைச் செலுத்தியது. அசாமில் உள்ள ‘ரைனோ ஏஜென்சீஸ்’ என்ற உள்ளூர் பீர் நிறுவனத்தை வாங்க மல்லையா திட்டமிட்டார். இந்த விஷயம் தெரிந்ததும் டேனி உஷாரானார். மல்லையாவை விட வேகமாகச் செயல்பட்டு, சுமார் 40 கோடி ரூபாய்க்கு ரைனோ ஏஜென்சீஸை அவரே வாங்கினார். மல்லியாவின் வருகைக்குத் தடை போட்டது மட்டுமல்லாமல், அந்தப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தையும் நிலைநாட்டினார்.
கோடீஸ்வர சாம்ராஜ்யம்:
டேனி தற்போது மூன்று மதுபான ஆலைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6.8 லட்சம் ஹெக்டோலிட்டர் பீர் உற்பத்தி செய்யப்படுகிறது. ‘யுக்சோம்’ இந்தியாவின் மூன்றாவது பெரிய பீர் நிறுவனமாக மாறியுள்ளது. இந்தத் தொழிலின் ஆண்டு வருமானம் 500 முதல் 700 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டேனியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய். பீர் மட்டுமல்லாமல், சிக்கிமில் உள்ள ‘நர்பு காங்’ போன்ற சொகுசு ஓய்வு விடுதிகளுக்கும் அவர் உரிமையாளராக இருக்கிறார்.
விருப்பப்படி வாழும் சுதந்திரம்: இத்தகைய நிதி பலத்துடன், அவர் தனது திரைப்படங்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற ‘ஷோலே’ திரைப்படத்தில் வரும் கபார் சிங் கதாபாத்திரத்தை, கால்ஷீட் இல்லாததால் அவர் கைவிட்டார் (அந்தப் பாத்திரம் பின்னர் அம்ஜத் கானுக்குச் சென்றது).
ஷோலே திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு, தனது சம்பளத்தை பத்து மடங்கு உயர்த்திவிட்டதாக டேனி வேடிக்கையாகக் கூறுவார். இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா தனது சமீபத்திய படமான ‘ஊஞ்சாய்’ படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்களை அனுப்பும்போது, டேனி அதற்குப் பதிலாக தனது பீர் தொழிற்சாலையின் புகைப்படங்களை அனுப்புவாராம். இது அவர் தனது தொழிலில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
Read More : முத்துவை சீண்டிய அருண்.. பளார் விட்ட அண்ணாமலை.. மீனாவுக்கு இது தேவையா..? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்..



