பித்ருக்களின் ஆசி வேண்டுமா..? தோஷம் நீக்கி வாழ்வில் வசந்தம் தரும் 5 புண்ணிய கோயில்கள்..!! தமிழ்நாட்டில் தான் இருக்கு..!!

temple 1

நம்முடைய முன்னோர்களான பித்ருக்களின் ஆசி, ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அச்சாணி போன்றது. அமாவாசை மற்றும் புண்ணிய தினங்களில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தில ஹோமம், தர்ப்பணம் போன்ற வழிபாடுகளை முறையாகச் செய்யத் தவறும்போது, அது ஜாதகத்தில் ‘பித்ரு தோஷமாக’ உருவெடுக்கிறது. இத்தகைய தோஷம் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத் தடை, குடும்பத்தில் அமைதியின்மை மற்றும் சந்தான பாக்கியம் கிடைப்பதில் தாமதம் போன்ற சவால்கள் ஏற்படக்கூடும் என ஆன்மிகப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். பித்ருக்களின் ஆத்மா சாந்தியடையவும், தோஷங்கள் நீங்கி வளம் பெறவும் தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட திருத்தலங்கள் மிக முக்கியப் பரிகாரத் தலங்களாகப் போற்றப்படுகின்றன.


பித்ரு தோஷம் போக்கும் தமிழகத்தின் 5 புனிதத் தலங்கள் :

பித்ரு தோஷ நிவர்த்தி என்று சொன்னாலே அனைவரது நினைவிற்கும் முதலில் வருவது ராமேஸ்வரம் தான். இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, 22 புனிதத் தீர்த்தங்களில் புனித நீராடுவது பாவங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை. இங்கு செய்யப்படும் தில ஹோமம் மற்றும் முன்னோர் வழிபாடுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ராமபிரான் தனது தந்தை தசரதருக்கு இங்கு பிதுர் காரியங்களைச் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

அடுத்ததாக, மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில் பூந்தோட்டம் அருகே அமைந்துள்ள திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோயில், பித்ரு வழிபாட்டிற்கு இணையற்ற இடமாகும். ஸ்ரீ ராமபிரான், தசரதருக்கும் ஜடாயுவிற்கும் இங்கு எள் (திலம்) கொண்டு தர்ப்பணம் செய்ததால் இந்த ஊருக்கு ‘திலதர்ப்பணபுரி’ என்ற பெயர் வந்தது. ராமேஸ்வரத்திற்குச் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தர்ப்பணம் செய்வது அதே பலனைத் தரும் எனக் கருதப்படுகிறது.

மூன்றாவதாக, சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் கோயில், பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற 14 தலங்களில் ஒன்றாகும். காசிக்கு இணையான வீரியம் கொண்ட இடமாகக் கருதப்படும் இங்கு, இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்துத் தர்ப்பணம் செய்வது பித்ருக்களுக்கு மோட்சத்தைத் தரும். முற்கால மன்னர்கள் பலரும் இங்கு திதி கொடுத்துப் பாவ விமோசனம் பெற்ற வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

4-வதாக திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில், ‘காசியை விட வீசம் அதிகம்’ என்ற பெருமைக்குரியது. எமன் மற்றும் பித்ரு தேவதைகளுடன் தொடர்புடைய இந்தத் தலம், தீராத தோஷங்களையும் போக்கக்கூடியது. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களை வழிபட்டால், பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

5-வதாக சென்னை மாநகரின் மையப்பகுதியான கோயம்பேட்டில் அமைந்துள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயம், பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிகச் சிறந்த இடமாகும். ராமாயண காலத்தில் லவ மற்றும் குசன் வாழ்ந்த இடமாகக் கருதப்படும் இத்தலத்தில், வால்மீகி முனிவர் தவம் செய்து பித்ரு தோஷம் நீங்கப் பெற்றதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் வசிப்பவர்கள் தங்களது பித்ரு தோஷப் பரிகாரங்களுக்கு அணுக வேண்டிய முக்கியமான தலம் இதுவாகும்.

Read More : விதியை மாற்றும் குலதெய்வ வழிபாடு..!! வாழ்வில் தடைகள் நீங்கி வெற்றி பெற முன்னோர்கள் காட்டிய எளிய வழி..!!

CHELLA

Next Post

அதிமுகவின் கோட்டையை தகர்க்கும் செந்தில் பாலாஜி..!! கூண்டோடு திமுகவில் ஐக்கியம்..!! ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி..!!

Tue Feb 3 , 2026
கொங்கு மண்டலத்தையும் மேற்கு தமிழகத்தையும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றும் நோக்கில், அக்கட்சியின் தலைமை பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் பலமான கரூர் மாவட்டத்தில் அக்கட்சிக்குச் செக் வைக்கும் விதமாகப் புதிய அரசியல் நகர்வுகள் அரங்கேறியுள்ளன. கரூர் மாவட்ட திமுகவின் முக்கிய முகமான அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், அதிமுகவின் கரூர் தெற்கு நகர ‘அம்மா பேரவை’ இணைச் செயலாளர் சரவணகுமார் […]
Senthil Balaji 2026

You May Like