குளிர்காலத்தில் குளிரை தடுக்க பலர் ஸ்வெட்டர் அணிவது வழக்கம். பெரும்பாலும் கம்பளி துணிகளால் தயாரிக்கப்படும் இந்த ஸ்வெட்டர்கள் உடலின் வெப்பத்தை தக்க வைத்துக்கொண்டு குளிரை சமாளிக்க உதவுகின்றன. ஆனால், இரவில் தூங்கும்போது ஸ்வெட்டர் அணிவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நொய்டாவில் உள்ள மாக்ஸா மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் சாரு கல்ரா, “சிறு குழந்தைகளுக்கு இரவில் ஸ்வெட்டர் அணிவது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
ஏன் தூங்கும் போது ஸ்வெட்டர் அணியக்கூடாது?
உடல் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு: இரவில் கம்பளி ஆடைகள் அணிவதால் உடல் அதிகமாக சூடாகிறது. இதனால் தோல் வறட்சியடைந்து, தடிப்புகள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிறு குழந்தைகளில் இது நீரிழப்பு அபாயத்தையும் ஏற்படுத்தும்.
ஒவ்வாமை பிரச்சினைகள் அதிகரிப்பு: தோல் ஒவ்வாமை அல்லது அரிக்கும் தோலழற்சி (Eczema) உள்ளவர்கள் ஸ்வெட்டர் அணிந்து தூங்கினால் பாதிப்பு அதிகரிக்கும். குழந்தைகளில் தூசி காரணமாக இருமல் மற்றும் சுவாச சிக்கல்கள் ஏற்படலாம்.
இரத்த அழுத்தம் மற்றும் இதய சிக்கல்கள்: ஸ்வெட்டர் காரணமாக அதிக வியர்வை ஏற்பட்டால், குறைந்த இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், தூக்கக் கலக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆஸ்துமா மோசமடையும் அபாயம்: கம்பளி துணிகளில் உள்ள மென்மையான இழைகள் மற்றும் தூசி துகள்கள் ஒவ்வாமையை தூண்டி, ஆஸ்துமா தாக்குதல்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. அதனால் ஆஸ்துமா நோயாளிகள் இரவில் ஸ்வெட்டர் அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாக்டீரியா தொற்றுகள்: ஸ்வெட்டர் மற்றும் சாக்ஸ் அணிந்து தூங்குவதால் ஏற்படும் அதிகப்படியான வியர்வை, பாக்டீரியா வளர்ச்சிக்கும் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும். எனவே படுக்கைக்குச் செல்லும் முன்பு அவற்றை அகற்றுவது அவசியம்.
இரவில் அதிக குளிராக இருந்தால் என்ன செய்யலாம்?
- மெல்லிய பருத்தி ஆடைகள் அணிந்து தூங்குங்கள்
- தடிமனான போர்வை பயன்படுத்துங்கள்
- ஹீட்டர் பயன்படுத்தினால், அறையில் ஒரு கிண்ணம் தண்ணீர் வைத்து காற்று வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
மொத்தத்தில், குளிரில் பாதுகாப்பு தேவை என்றாலும், இரவில் ஸ்வெட்டர் அணிவதை விட பாதுகாப்பான மாற்று வழிகளையே தேர்வு செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read more: ஒரு நாளைக்கு ரூ. 2 சேமிப்பதன் மூலம் ரூ. 2 லட்சம் பெறலாம்.. சூப்பரான காப்பீட்டு திட்டம்..!



