சில நிறுவனங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் ஏன் இன்னும் வாடிக்கையாளர்களிடம் ஆதார், பான் போன்ற உணர்வான ஆவணங்களின் நகலை கேட்கிறார்கள்? இந்த ஆவணங்கள் அவ்வளவு கவனமாக பாதுகாக்கப்படாமல் கோப்புகள், டிராயர்கள், அல்லது அலமாரிகளில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்?
தனிப்பட்ட தகவல் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரத் தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், நிகழ்வுகள், வணிக நிலையங்கள் மற்றும் பிற சேவை நிறுவனங்கள் அடையாள சரிபார்ப்பை எவ்வாறு செய்கின்றன என்பதில் பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டமைப்பு வரும் முக்கிய நோக்கங்கள்:
குடிமக்களின் தனிப்பட்ட தரவை தேவையற்ற முறையில் சேகரிப்பதை குறைக்க
அடையாள ஆவணங்களின் பிரதி நகலை சேமிப்பதனால் ஏற்படும் அபாயங்களை முடக்கும்
தரவு கசிவு, அடையாள திருட்டு போன்ற பிரச்சனைகளை தடுக்கும்
பாதுகாப்பான, டிஜிட்டல் மற்றும் கண்காணிக்கக்கூடிய சரிபார்ப்பு முறையை செயல்படுத்தும்
ஆதார் கார்டு நகல் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது பான் கார்டை புகைப்படம் எடுத்து வைப்பு போன்ற நடைமுறையை குறைக்கும் வகையில் அரசு புதிய விதிகளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
ஆதார் சரிபார்ப்பு நிறுவனங்களுக்கு கட்டாய பதிவு
UIDAI (இந்திய தரவு அடையாள ஆணையம்) தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் பேசிய போது ஆதார் மூலம் அடையாள சரிபார்ப்பு செய்யும் ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்ற நிறுவனங்கள் அவசியமாக பதிவு செய்ய வேண்டிய புதிய விதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விதி அமலுக்கு வந்த பிறகு, இவ்வகை நிறுவனங்களுக்கு ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கான அணுகலை அரசு வழங்கும். அந்த தொழில்நுட்பத்தின் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது உருவாக்கப்பட்டு வரும் புதிய ஆதார் பயன்பாட்டுடன் இணைத்து வாடிக்கையாளர்களின் அடையாளத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் சரிபார்க்க முடியும்.
புதிய விதி அதிகாரத்தால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது, விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலம் ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த விதியின் நோக்கம் Aadhaar அட்டையின் நகலை எடுக்கும் பழக்கத்தை (காகித அடிப்படையிலான சரிபார்ப்பு) தடுப்பது தான்…
புதிய தொழில்நுட்பம் – செயலிழப்பு பிரச்சனைகளை தீர்க்கும்
அடையாளச் சரிபார்ப்பிற்கான புதிய ஆஃப்லைன் முறைமை பல இடங்களில் ஏற்படும் ‘சர்வர் டவுன்’ அல்லது ‘இடைநிலை சர்வர் செயலிழப்பு’ பிரச்சனைகளைக் குறைக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிகளின் கீழ், ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு செய்ய விரும்பும் ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்ற நிறுவனங்களுக்கு API (Application Programming Interface) அணுகல் வழங்கப்படும். இந்த API-ஐப் பயன்படுத்தி, அவர்கள் தங்கள் சொந்த கணினி/மொபைல் அமைப்புகளை புதுப்பித்து, நேரடியாக புதிய ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு வசதியுடன் இணைக்க முடியும். இதன் மூலம் மத்திய ஆதார் தரவுத்தளத்தை இணைக்கும் இடைநிலை சர்வர்கள் செயலிழந்தாலும் வேலைகள் நின்று விடாமல் தொடர முடியும்.
UIDAI ஒரு புதிய ஆப்பை சோதனைக்காக இயக்கி வருகிறது. இந்த ஆப், ஒவ்வொரு முறையும் ஆதார் மைய தரவுத்தளத்துடன் இணைக்காமல் ஆப்-டு-ஆப் (App-to-App) முறையில் நேரடியாக ஆதார் சரிபார்ப்பு செய்ய அனுமதிக்கும்.
டிஜிட்டல் பேர்சனல் டேட்டா
இந்த புதிய ஆப், விமான நிலையங்கள், வயது உறுதி தேவையான கடைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படலாம். இது, காகித ஆதார் நகல் தேவையை குறைத்து, பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பேர்சனல் டேட்டா புரொடெக்ஷன் சட்டத்துக்கு ஏற்ப புதுப்பிப்பு
இந்த புதிய ஆப், 18 மாதங்களில் முழுமையாக செயல்படும் டிஜிட்டல் பேர்சனல் டேட்டா புரொடெக்ஷன் சட்டத்துக்கு ஏற்ப ஆதார் அத்தாட்சிப்படுத்தல் முறையை மேம்படுத்தும். பயனர்கள் இந்த ஆப்பில், தங்களின் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பிக்கலாம்.. மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களையும் அதே ஆப்பில் சேர்க்கலாம்.. இதன் மூலம், காகித நகல்கள் தேவையின்றி, பாதுகாப்பான, வேகமான, நவீன ஆதார் சரிபார்ப்பு முறை உருவாகும்.
ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வுகளில் தற்போது ஆதார் எப்படி பயன்படுத்தப்படுகிறது?
ஹோட்டல்களில் செக்-இன் செய்யும்போது, ஆதார் அட்டை ஒரு செல்லுபடியாகும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ரிசெப்ஷன் பணியாளர்கள் பொதுவாக உங்கள் ஆதார் அட்டையின் அசல் ஆவணத்தை பார்த்து பெயர், புகைப்படம், முகவரி போன்ற விவரங்களைக் கண்காணிக்கிறார்கள்.
அதன் பிறகு, அவர்கள் ஆதாரின் ஒரு புகைப்பட நகலை (photocopy) எடுத்துக் கொண்டு தங்களின் பதிவுகளாக வைத்துக்கொள்கிறார்கள்.
இதேபோல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (event organisers) கூட, வருகையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்க அரசு வெளியிட்ட ID – ஆதார், பான், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் புகைப்பட நகல்களை சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது.



