இன்றைய காலகட்டத்தில் நவீன வாழ்க்கை முறை மட்டுமல்ல, சமையலறை கலாச்சாரங்களும் வேகமாக மாறி வருகின்றன. நவீன சமையலறைகளில் வசதிக்காக அதிகம் பயன்படுத்தப்படும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள், சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வரும் ஒன்று பீங்கான் சமையல் பாத்திரங்கள் சமையலறைக்கு ஒரு ஆரோக்கியமான தேர்வா? அல்லது எப்படி அணுக வேண்டும்? என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
பீங்கான் (Ceramic) பாத்திரங்கள் ஒன்றும் சமையலில் புதிது அல்ல. கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்தே மனிதர்கள் பீங்கானைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அழகு, அதன் தன்மை, வெப்பம் தாங்கும் திறன் போன்ற காரணங்களால் இவை பலரது விருப்பமாக உள்ளது. ஆனால், இவற்றின் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை போன்றவை பற்றி முழுமையான புரிதல் இல்லாமல் தேர்வு செய்வது, சில சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு மாற்று : பெரும்பாலான நான்-ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் PFOA (Perfluorooctanoic acid) மற்றும் PTFE (Polytetrafluoroethylene) போன்ற ரசாயனங்கள், வெப்பத்தில் தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், தரமான பீங்கான் பாத்திரங்களில் இவ்வாறான ரசாயனங்கள் இடம்பெறுவதில்லை.
பாதுகாப்பு : உணவுடன் தொடர்பில் இருக்கும் பகுதிகளில் ஈயம் (Lead), காட்மியம் (Cadmium) போன்ற நச்சு உலோகங்கள் இல்லாத நிலைத்த தன்மை கொண்ட பீங்கான் பாத்திரங்கள், பாதுகாப்பானவை.
அழகு மற்றும் வடிவமைப்பு : கலர்ஃபுல் டிசைன்களில் கிடைக்கும் பீங்கான் பாத்திரங்கள், சமையலறைக்கு கூடுதல் அழகையும் சேர்க்கின்றன.
பீங்கான் பாத்திரங்களில் கவனிக்க வேண்டியவை :
* மலிவாகக் கிடைக்கும் பீங்கான்கள், தயாரிப்பு விவரங்கள் இல்லாத பீங்கான் பாத்திரங்கள், மேற்பரப்பை அழகாக்கும் விதமாக ஈயம், காட்மியம், பேரியம் போன்ற உலோகங்கள் கலக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, அதிக மஞ்சள், சிவப்பு, நீலம் போன்ற அடர்ந்த நிறங்களில் கவனம் தேவை.
* பாத்திரத்தின் மேற்பரப்பில் கீறல் இருந்தாலோ, வெடிப்புகள் ஏற்பட்டாலோ, அந்த பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்காது. ரசாயனங்கள் அதன் மூலம் உணவில் கலக்க வாய்ப்பு உண்டு.
* எல்லா பீங்கான் பாத்திரங்களும் அடுப்பில் பயன்படுத்த ஏற்றவை அல்ல. சில பீங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்படாதவையாக இருக்கலாம். அதனால், “Stovetop safe”, “Oven safe” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து மட்டுமே சமைக்கவும்.
* பொதுவாக 180°C (கிட்டத்தட்ட 350°F) க்கும் அதிகமான வெப்பநிலைக்கு பீங்கான் பாத்திரங்களை வைத்தல் ஏற்றதல்ல. குறிப்பாக, வெப்பநிலை திடீரென உயரும் சூழ்நிலைகளில் பீங்கான் உடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பீங்கான் பாத்திரங்கள் சிறந்தது என்றாலும், சமையலறையில் பயன்படுத்தும் போது அதன் தரம் மற்றும் பாதுகாப்பு முக்கியம். தரமான பீங்கான்களை தேர்வு செய்து, அதன் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றினால், இவை உங்கள் சமையலறையில் அழகாகவும், சுகாதாரமாகவும் பயன்படக்கூடிய சிறந்த மாற்றாக அமையும்.