கழிப்பறையில் நீண்ட அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும், அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால் ஆசனவாய்ப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்த நாளங்கள் வீங்கி மூல நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்மார்ட் போன் வந்த பிறகு உலக அளவில் எண்ணற்ற விஷயங்களை நாம் எளிதாக தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை, தொழில் என எக்கச்சக்கமான துறைகளுக்கு இணையதள தொழில்நுட்பம் மிகப்பெரிய தூணாக மாறி உள்ளது. அதே நேரத்தில் அனைத்து டெக்னாலஜியும் நம் தேவைக்கு மீறி பயன்படுத்தும் போது அது நமக்கு பாதகமாகவே முடிகிறது. ‘போன் தான யூஸ் பண்றோம்.. இதனால என்ன ஆகப்போகுது. சரி…கொஞ்ச நேரம் பாத்துட்டு நம்ம வேலையை தொடங்கலாம்’ இந்த வார்த்தையை நமக்கு நாமே ஆறுதல் படுத்திக் கொண்டு தேவையில்லாமல் அதிக நேரம் மொபைல் போனில் மூல்கி கிடக்கிறோம். இதுவே மிகப்பெரிய தவறு என்று எண்ணும் நிலையில் ஒரு படி மேலே பலர் கழிவறைக்கு செல்போனை எடுத்து சென்று சோசியல் மீடியாவில் அங்கும் நேரத்தை செலவிடுகிறார்கள்.
மலம் கழிக்கும்போது முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டியது அவசியம். மொபைல் போன் பார்ப்பதால் கவனம் சிதறி மலம் முழுமையாக வெளியேறாமல் போகலாம்.எனவே, கழிவறையில் மொபைல் போன் பார்ப்பதை தவிர்ப்பது அல்லது நேரத்தை குறைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கழிவறை என்பது பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் நிறைந்த இடமாகும். மொபைல் போனை அங்கு எடுத்துச் செல்வதால், போனில் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். பின்னர் அந்த போனை நாம் பயன்படுத்தும்போது கிருமிகள் நம் கைகள் மற்றும் உடல் மூலம் பரவி வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தலாம்.
மூல நோய் (Hemorrhoids): கழிவறையில் நீண்ட நேரம் உட்காருவது ஆசனவாய் மற்றும் மலக்குடல் பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். மொபைல் போன் பார்ப்பதால் நேரம் போவதே தெரியாமல் அதிக நேரம் உட்கார்ந்திருக்கும்போது, இந்த அழுத்தம் அதிகரித்து மூல நோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது.
குடல் இயக்கம் குறைபாடு மற்றும் மலச்சிக்கல்: மொபைல் போனில் கவனத்தை செலுத்துவதால், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை கவனிக்காமல் போகலாம். இது குடல் இயக்கத்தை பாதித்து மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது குடல் இயக்கத்தை மந்தமாக்கும்.