விவாகரத்து வேண்டும் என்று கேட்ட கோபத்தில், தன் மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருடைய தோழிகளுக்கு அனுப்பி அவமானப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர் பெயர் கோவிந்தராஜ் (27) ஆவார். இவர் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார்.
23 வயதான அவரது மனைவி, தன்னை பழிவாங்கவே கோவிந்தராஜ் இப்படிச் செய்தார் என்று புகார் அளித்துள்ளார். காவல்துறை கூற்றுப்படி, இவர்கள் 2024-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில நாட்களிலேயே, கோவிந்தராஜ் தனது மனைவியின் பணத்தை எடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அடிக்கடி சண்டை வர, அந்தப் பெண் கணவரை விட்டுப் பிரிந்து, ஆந்திராவில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
ஆனாலும், கோவிந்தராஜ் போன் செய்து, “உன் ஆபாசப் புகைப்படங்களைப் பொதுவெளியில் போட்டு உன் மரியாதையைக் கெடுப்பேன்” என்று தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்தப் பெண், பெங்களூரு திரும்பி ஒரு விடுதியில் தனியாகத் தங்கினார். அங்கும் வந்த கணவர், ‘உன்னைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டி மனரீதியாக ரொம்பவே டார்ச்சர் கொடுத்துள்ளார்.
இந்தத் தொல்லையை தாங்க முடியாமல், அந்தப் பெண் விவாகரத்து கேட்டுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற கோவிந்தராஜ், தன் மனைவியின் தனிப்பட்ட புகைப்படங்களை ‘த்ரெட்ஸ்’ என்ற ஆப்பில் பதிவேற்றி, கூடவே அவருடைய தோழிகளையும் இணைத்துவிட்டார். இதை நண்பர்கள் மூலம் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பெண், வேறு வழியின்றி போலீஸில் புகார் கொடுக்க முடிவெடுத்தார்.
ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட பெண் வேறு சில காவல் நிலையங்களுக்குச் சென்றபோது, “இது கணவன் செய்த தவறு, வெளியாள் செய்யவில்லை. அதனால் புகார் எடுக்க முடியாது” என்று கூறி போலீஸார் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். கடைசியாக, அம்ருதஹள்ளி காவல் நிலையத்துக்கு வந்தபோது, அங்குள்ள ஒரு பெண் போலீஸ் அதிகாரி வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கோவிந்தராஜை பிடித்து விசாரித்துள்ளார்.
இந்தச் செயலுக்காக கோவிந்தராஜ் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.



