மாறிவரும் வாழ்க்கை முறைச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்கள் காரணமாக, 30-களின் தொடக்கத்திலேயே ஓய்வுக் காலம் குறித்துத் திட்டமிட வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓய்வுக் காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாகக் கழிக்க வேண்டுமென்றால், இப்போதிருந்தே சரியான திட்டமிடலுடன் சேமிப்பைத் தொடங்குவது கட்டாயம்.
பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமற்ற கனவு அல்ல. சரியான திட்டமிடல், சுய ஒழுக்கம் மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது மூலம் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும். ஓய்வுக்காலத்தில் நமக்குத் தேவைப்படும் தொகையைக் கணக்கிடும்போது, பணவீக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
உதாரணமாக, இன்று உங்கள் மாதச் செலவு ரூ.30,000 ஆக இருந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே வாழ்க்கை முறையைத் தொடர ஆண்டிற்கு 6% பணவீக்கத்துடன் கணக்கிட்டால், உங்களுக்கு மாதத்திற்குச் சுமார் ரூ.1 லட்சம் தேவைப்படும். நீங்கள் 60 வயதில் ஓய்வு பெற்று, அடுத்த 25 ஆண்டுகளுக்கு (85 வயது வரை) மாதம் ரூ.1 லட்சம் வருமானம் அல்லது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்ட விரும்பினால், உங்கள் ஓய்வுக் கால நிதியாக நீங்கள் திரட்ட வேண்டிய மொத்தத் தொகை சுமார் ரூ.2.5 கோடி ஆகும். இவ்வளவு பெரிய தொகையைச் சேமிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக சாத்தியம் தான்.
இந்த இலக்கை அடையச் சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் சேமிப்பைத் தொடங்குகிறீர்களோ அவ்வளவு நல்லது. அத்துடன், எந்தச் சமரசமும் இல்லாமல் சீரான முதலீடு அவசியம். நீண்ட காலத்துக்குச் சீராக முதலீடு செய்யும்போது, கூட்டு வட்டி உங்கள் பணத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும். இந்த முதலீட்டைப் பங்குகள் (Stocks) மற்றும் கடன்பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யலாம். பணவீக்கத்தில் இருந்து சேமிப்பைப் பாதுகாக்க ஒரு பகுதியை தங்கத்தில் கூட முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம். ஓய்வுக் கால நிதிக்கு ஷாட்கட் எதுவுமில்லை. ஒழுக்கமும், சீரான சேமிப்பும் மட்டுமே இந்த இலக்கை அடைய உதவும் ஒரே ரகசியம் ஆகும்.
Read More : எட்டாக்கனியாக மாறிய தங்கம்..!! கவலையை விடுங்க..!! இனி இந்த உலோகங்களை வாங்குங்க..!!